காணாமல் போனோர் அலுவலகத்தை என்னிடமிருந்து ஜனாதிபதி பறிக்கவில்லை | தினகரன்

காணாமல் போனோர் அலுவலகத்தை என்னிடமிருந்து ஜனாதிபதி பறிக்கவில்லை

காணாமல் போனோர்களுக்காக நிறுவப்பட்ட அலுவலகத்தை ஜனாதிபதி என்னிடமிருந்து பறிக்கவில்லை. நாட்டின் குடிமகனாக இருக்கும் ஜனாதிபதியே வைத்திருப்பதுதான் மிகப்பொருத்தமென்ற கோரிக்கையையே, தான் ஜனாதிபதியிடம் தெரிவித்தாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாரேஹண்பிட்டியிலுள்ள தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரை அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து சர்வமத தலைவர்களினால் ஆசியுரை வழங்கப்பட்டது.

இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் இந்த அமைச்சானது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர்கள் வகித்த பிரபலமான முக்கிய அமைச்சாகும். இன்று ஏனைய அமைச்சர்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு கட்டிடங்களையும், வீடுகளையும் பாலங்களையும் கட்டுகின்றார்கள். அவை எல்லாம் தேவைதான். அதேபோல நாட்டில் நல்லிணக்கம் தேவைப்படுகிறது. அதனால் நான் மக்களின் இதயங்களையும் மனங்களையும் தலைகளையும் கட்டிவருகின்றேன்.

அபிவிருத்தியுடன் நல்லிணக்க செயற்பாடும் நடைபெறவேண்டும். இன்று பயங்கரவாதம், அரச பயங்கரவாதம், மதவாதம், இனவாதம், அடிப்படைவாதம் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு சட்டப்படி எனக்கு இருக்கின்றது. எனவே எனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சுக்கு முழமையான தலைமை வழங்குவேன். விளையாடுவதற்காக நான் இங்கு வரவல்லை. என்னுடன் விளையாடவும் முடியாது. அந்த விடயத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன். இந்த அமைச்சு 24 மணி நேரமும் உழைக்கும் ஒரு அமைச்சாகும். ஜனாதிபதி என்மீது வைத்திருக்கின்ற அந்த நம்பிக்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாது செயற்பட்டு காட்டுவேன்.

நன்றாக மூன்று மொழிகளையும் எழுத, வாசிக்க, பேசக்கூடியவன் நான். அந்த வகையில் நான்தான் முதல் குடிமகன் என்று சொல்லக்கூடிய தகைமை எனக்கு இருக்கின்றது. இந்த அமைச்சுக்கு பொருத்தமானவன் நான் என நானே நினைக்கின்றேன். சகலருக்கும் இன, மத, மொழி இருக்கின்றது. கலாச்சார வரலாறும் இருக்கின்றது.

அதில் பிரச்சினை கிடையாது. பன்மைத்துவம் என்பது ஒரு சக்தி அதற்கும் மேலாக இலங்கையர் என்ற அடையாளம் இருக்க வேண்டும். இலங்கையர் என்ற அடையாளத்திற்கு பிறகுதான் எல்லாம். பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பற்றி எதுவும் கூறவில்லையென தமிழ் தலைமைகள் குற்றம் சாட்டுகின்றன.நான் அவரது உரையை கவனமாக செவிமடுத்துக் கேட்டேன். அவர் வடக்கு, கிழக்கு மக்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என எல்லோரையும் பற்றி சொன்னார்.

ஜனாதிபதி அப்படி சொல்லவில்லையென்று சொன்னால் நான் இந்த பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன். பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு ஜனாதிபதியின் உரையை செவிமடுக்காது நன்றாக தூங்கிக்கொண்டிருந்தால் எப்படி விளங்கும். எனவே ஜனாதிபதியின் உரையை தூங்காமல் கேட்டிருக்க வேண்டும். காணாமல் போனோர்களுக்கான அலுவலகம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.

ஜனாதிபதியிடம் நான்தான் கோரிக்கை விடுத்திருந்தேன். காணாமல் போனோர்களுக்கான அலுவலகத்தையும் ஓ.ஐ.பி மற்றும் ஒனூர் என்ற நல்லிணக்க செயலகத்தையும் எனது அமைச்சிற்குள் தராமல் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன். காணாமல் போனோர் விவகாரம் பிரதான விவகாரம். தமிழ் மக்களின் உணர்ச்சிபூர்வமான விடயம். நாட்டின் குடிமகன் என்ற வகையில் அது ஜனாதிபதியிடமிருப்பதுதான் சிறப்பானதாக இருக்கும். எனவே அமைச்சர் என்ற வகையில் நிச்சயமாக பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

(கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...