Thursday, March 28, 2024
Home » இறை நம்பிக்கையற்று வாழ்பவர்கள்‌  இயேசுவின்‌ பார்வையில்‌ மூடர்களே!

இறை நம்பிக்கையற்று வாழ்பவர்கள்‌  இயேசுவின்‌ பார்வையில்‌ மூடர்களே!

by damith
November 14, 2023 6:00 am 0 comment

இந்த ஞாயிறு நற்செய்தி வாசகம் நமக்கு ஐந்து கன்னியர்களின் உவமையை சிறப்பாகத் தருகிறது. அந்த உவமை மூலம் ஆண்டவராகிய இயேசு நமக்கு சிறந்த வாழ்க்கைப் படிப்பினைகளைத் தருகின்றார்.

விண்ணகம்‌ திறக்கும்‌ உள்ளே நுழையலாம்‌ என ஒருவன்‌ சொர்க்கத்தின்‌ வாசலிலே ஆவலோடு காத்திருந்தான்‌. கதவு திறக்கவே இல்லை. அவனுக்குக்‌ களைப்பு. காத்திருந்த களைப்பு. உறங்கிவிட்டான்‌. ஒரு நிமிடம்‌ தான்‌. அந்த நேரம்‌ பார்த்து விண்ணகத்தின்‌ கதவு திறந்து மூடிக்‌ கொண்டதாம்‌!

அதே போன்ற நிலைதான்‌ இந்த ஞாயிறு வழிபாட்டு வாசக உவமையில்‌ வரும்‌ அந்த ஐந்து கன்னிப்‌ பெண்களுக்கும்‌ ஏற்பட்டது.

எடுத்த எடுப்பிலேயே இயேசு அவர்களை ‘அறிவிலிகள்‌” என்று அறிமுகப்படுத்துகிறார்‌. “மணமகனை எதிர்கொள்ள மணமகளின்‌ தோழியர்‌ பத்துப்பேர்‌ தங்கள்‌ விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச்‌ சென்றார்கள்‌.

அவர்களுள்‌ ஐந்து பேர்‌ அறிவிலிகள்‌” (மத்‌. 25:2). அதற்குக்‌ காரணம்‌ எண்ணெய்‌ இல்லை என்பதா? அல்ல. எண்ணெய்‌ இல்லையே என்ற உணர்வற்று இருந்ததுதான்‌.

எண்ணெய்‌ இல்லை என்பதுகூட அவ்வளவு பெரிய குற்றமல்ல. எண்ணெய்‌ இல்லையே என்ற எண்ணம்‌ இல்லாமல்‌ இருந்ததுதான்‌ பெரிய குற்றம்‌. இயேசுவின்‌ கண்டனத்துக்குரியது.

தன்னிலை உணராத, விழிப்புணர்ச்சி இல்லாத நிலை. அந்த நள்ளிரவில்‌ எத்துணை முயற்சி எடுத்து எண்ணெய்‌ வாங்கி வந்தனர்‌. என்றாலும்‌ கதவைத்‌ திறக்கவில்லையே! உழுகிற நாளில்‌ ஊர்‌ சுற்றிவிட்டு அறுக்கிற நாளில்‌ அரிவாள்‌ எடுத்துச்‌ செல்பவள்‌ அறிவிலிதானே!

“சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம்‌ வேண்டுங்கள்‌” (மத்‌. 26:41) என்று இயேசு கூறியது நமக்குத்‌ தெரியாததன்று.

எனினும் வாழ்க்கையில்‌ களைப்பு. பல்வேறு காரணங்களால்‌ களைப்பு. களைப்புக்கும்‌ சோர்வுக்கும்‌ ஆளாகாத மனிதன்‌ யார்‌? களைப்பினால்‌ வருகின்ற உறக்கம்‌.

மனம் ஆர்வமுடையது தான்‌. ஆனால்‌ உடல்‌ வலுவற்றதாக (மத்‌. 26:41) இருப்பதால்‌ இயேசு ஆழ்துயரத்தோடு கெத்சமனித்‌ தோட்டத்தில்‌ இறை வேண்டுதலில்‌ ஈடுபட்டபோது பேதுருவும்‌ யோவானும்‌ யாக்கோபும்‌ உறங்கிக்‌ கொண்டிருந்ததை நாம்‌ அறிவோம்‌. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று.

இத்தகைய சூழலில்‌ நாம்‌ செய்ய வேண்டியது ஒன்றுண்டு. வாழ்க்கையில்‌ எது முக்கியம்‌ என்பதை அறிய நாம்‌ முற்பட வேண்டும்‌. இத்தகைய அறிவைக்‌ கொடுப்பது ஞானம்‌. விழிப்புணர்வோடு கூடிய ஞானம்‌.

தூய ஆவியின்‌ வரங்களில்‌ முதலிடம்‌ பெறுவது (1 கொரி. 12:8). இதை அடைந்த மனிதன்‌ களைப்பினின்றும்‌ சோர்வு தரும்‌ அனைத்துக்‌ கவலைகளினின்றும்‌ விடுபடக்‌ கற்றுக்‌ கொள்கிறான்‌. அதனால்தான்‌ “ஞானத்தை அடைய விழிப்பாயிருங்கள்‌” (சா.ஞா. 6:12-16) என்று அறிவுறுத்துகிறது ஞாயிறு முதல்‌ வாசகம்‌.

ஒரு பெண்ணுக்குப்‌ பொழுது விடிந்தால்‌ திருமணம்‌. அவள்‌ எப்பொழுதும்‌ பொழுது விடிந்தே எழுகின்ற பழக்கமுடையவள்‌. இருந்தாலும்‌ திருமண நாளாகிய அன்று பொழுது புலருமுன்பே எழுந்து தன்னையே அழகுபடுத்திக்‌ கொள்வாளன்றோ! அவளிடமிருந்த வெகுநேரம்‌ தூங்கும்‌ பழக்கம்‌ எங்கே போனது? புதிய

வாழ்க்கைக்குள்‌ நுழையப்‌ போகிறோம்‌, மணமகனைச்‌ சந்திக்கப்‌ போகிறோம்‌ என்ற ஆர்வம்‌, துடிப்பு அவளது தூக்கத்தையெல்லாம்‌ விழுங்கிவிட்டது.

அவ்வாறே இயேசுவோடு என்றும்‌ வாழ அவருக்காகக்‌ காத்திருக்கிறேன்‌ என்ற எண்ணம்‌ நமக்குள்‌ இருக்குமானால்‌ நம்மால்‌ எப்படி உறங்க முடியும்‌. இயேசு தவறாது வருவார்‌ இதில்‌ எந்த ஐயமும்‌ தேவையில்லை என்கிறார்‌ திருத்தூதர்‌ பவுல்‌ (1 தெச. 4:16,17).

நாமும்‌ ஒவ்வொரு திருப்பலியிலும்‌ ‘விண்ணுலகில்‌ இருக்கிற எங்கள்‌ தந்தையே’ என்ற செபத்தைச்‌ சொன்னதும்‌, “நாங்கள்‌ நம்பியிருக்கும்‌ பேரின்ப வாழ்வையும்‌ எம்‌ மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின்‌ வருகையையும்‌ மகிழ்ச்சியுடன்‌ எதிர்பார்த்திருக்கின்றோம்‌’” என்று முழக்கமிடுகிறோம்‌.

அறிவிலிகள்‌ என்று இயேசு குறிப்பிடும்‌ ஐந்து கன்னியர்களால்‌ எப்படி உறங்க முடிகிறது? அந்த அலட்சியத்துக்கு என்ன காரணம்‌? மணமகன்‌ (இயேசு) மீது தாகமற்று இருந்ததுதான்‌.

கடவுள்‌ மேல்‌ அன்பு, நம்பிக்கை கொண்டு அவரது கட்டளைகளைக்‌ கடைப்பிடித்தலே உண்மையான ஞானம்‌. அன்பு மேலீட்டால்‌, விருப்புடன்‌ விழிப்புடன்‌ ஞானம்‌ தேடப்பட வேண்டும்‌. அப்படித்‌ தேடுவோரை ஞானமே தேடிவரும்‌. (சா.ஞா. 6:13).

“சான்றோரின்‌ ஒளி சுடர்‌ வீசிப்‌ பெருகும்‌. பொல்லாரின்‌ விளக்கோ அணைக்கப்படும்‌” (நீ.மொ. 13:9).

உலகினர்‌ பார்வையில்‌ முன்மதியோடு செயல்பட்ட ஒருவனின்‌ உவமையையும்‌ இயேசு கூறுகிறார்‌. ஆனால்‌ இயேசு அவனை “அறிவிலியே’ என்றுதான்‌ அழைக்கிறார்‌. அறிவற்ற செல்வந்தனின்‌ உவமை (லூக்‌. 12:13-21). பல்லாண்டுகளுக்குத்‌ தேவையான தானியங்களை முன்மதியோடு சேகரித்து வைத்தவனின்‌ கதை. இறை நம்பிக்கை இல்லாது, பிறர்‌ மீது எவ்வித அக்கறையும்‌ கொள்ளாது வாழ்பவர்கள்‌ இயேசுவின்‌ பார்வையில்‌ மூடர்களே! மாறாக நேர்மையற்ற செல்வத்தைக்‌ கொண்டு நண்பர்களைத்‌ தேடிக்‌ கொள்பவர்களே இயேசுவின்‌ பார்வையில்‌ முன்மதியுடையோர்‌. (லூக்‌ 16:9).

எண்ணெய்‌ இருந்தால்‌ மட்டும்‌ போதாது. விளக்கு எரிந்தால்‌ மட்டும்‌ போதாது. எங்கே எரிகிறது எப்படி எரிகிறது, எப்பொழுது எரிகிறது என்பதும்‌ முக்கியம்‌.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT