Home » காசா மருத்துவமனை வாயிலில் இஸ்ரேலிய டாங்கிகள் நிறுத்தம்

காசா மருத்துவமனை வாயிலில் இஸ்ரேலிய டாங்கிகள் நிறுத்தம்

அல் ஷிபா மருத்துவமனை செயலிழப்பு: சிசுக்களின் மரணம் உயர்வு

by damith
November 14, 2023 6:03 am 0 comment

காசாவின் வடக்கு பகுதியை கைப்பற்றும் பிரதான இலக்குடன் தரைவழி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய இராணுவம் காசா நகரில் உள்ள பிரதான மருத்துவமனையின் வாயிலை நேற்று (13) அடைந்த நிலையில் போதிய எரிபொருள் இல்லாததால் பிறந்த குழந்தைகள் உட்பட நோயாளிகள் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவைத் தாண்டி இந்தப் போர் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் சூழலில் இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லையில் மோதல் நேற்று அதிகரித்திருந்தது. அண்டை நாடான சிரியாவில் ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் 75 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு மேலும் 240 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்தப் போர் வெடித்தது.

அது தொடக்கம் காசா மீது வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக இஸ்ரேல் இடைவிடாது நடத்திவரும் தாக்குதல்களில் அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். காசாவில் வடக்கு பகுதியில் இருந்து முழு மக்களுக்கும் வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. இந்த தாக்குதல்களில் 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர்.

எனினும் காசா மருத்துவமனைகள் செயலிழந்த சூழலில் அங்கு இடம்பெறும் உயிரிழப்புகள் பற்றி புதிய தகவல்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக புதுப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேலிய தரைப்படை வடக்கு பிரதான பகுதியான காசா நகரை விரைவாக சுற்றிவளைத்தது. அது தொடக்கம் தீவிர மோதல்கள் இடம்பெற்று வரும் சூழலில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை சுற்றிவளைத்தது. அந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவமனைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கப்பாதை அமைத்து பாதுகாப்புப் பெறுவதாக இஸ்ரேல் சுமத்தும் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அல் ஷிபா மருத்துவமனைக்குள் இருக்கும் அந்தப் பகுதிக்கான சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா, இஸ்ரேலிய டாங்கிகள் தற்போது மருத்துவமனை வாயிலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுக்கு வெளியே டாங்கி நிலைகொண்டுள்ளது. இது தான் இன்றைய (13) காலையின் நிலைமையாக உள்ளது” என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் பேசிய கித்ரா தெரிவித்தார்.

இங்கிருக்கும் பொதுமக்களை வெளியேறும்படியும் மருத்துவர்கள் நோயாளர்களை வேறு இடத்திற்கு அனுப்பும்படியும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கான பிரிவில் இருந்து குழந்தைகளை வெளியேற்றுவதற்கு முயன்றதாகவும் அவசர மின் பிறப்பாக்கிகளுக்காக 300 லீற்றர் எரிபொருளை மருத்துவமனை வாயிலில் வைத்ததாகவும் ஆனால் ஹமாஸினால் அது தடுக்கப்பட்டது என்றும் இஸ்ரேல் கூறியது.

எரிபொருளை நிராகரித்ததாக கூறுவதை மறுத்த காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் கித்ரா, 300 லீற்றர் என்பது மருத்துவமனைக்கு அரை மணி நேரம் மின்சாரம் வழங்கவே போதுமானது என்றார். ஷிபா மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 8,000 தொடக்கம் 10,000 லீற்றர் தேவைப்படுவதாகவும் அதனை செம்பிறை சங்கம் அல்லது சர்வதேச உதவி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட வேண்டும் என்று அவர் ரோய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

ஷிபா மருத்துவமனையில் அடைகாப்புக் கருவியில் 45 சிசுகள் இருப்பதாகவும் அதில் மூன்று சிசுக்கள் கடந்த ஞாயிறன்று இறந்ததாகவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குண்டுத் தாக்குதல்களால் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் சாதாரண படுக்கைக்கு மாற்றப்பட்டதாக அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அஹமது எல் மொகல்லதி தெரிவித்துள்ளார். அந்தக் குழந்தைகளுக்கு உஷ்ணம் வழங்குவதற்கு போதுமான மின்சாரம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நாளுக்கு நாள் அவர்களில் அதிகமானவர்களை நாம் இழக்க நேரிடும்” என்று அந்த மருத்துவர் கூறினார்.

அல் ஷிபா மருத்துவமனை, “தொடர்ந்தும் ஒரு மருத்துவமனையாக இயங்கவில்லை” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ், எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.

“துரதிர்ஷ்டவசமாக, நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு வழங்கும் இடமாக இருக்கும் மருத்துவமனைகள் மரணம், பேரழிவு மற்றும் அவநம்பிக்கைகான இடமாக மாறியிருக்கும் சூழலில் உலகம் வாயை மூடி இருக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்-குத்ஸ் மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும், இனி செயல்படவில்லை என்றும் நேற்றுக் காலை, பலஸ்தீன செம்பிறை சங்கம் கூறியது. மின்சாரம் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஊழியர்கள் இன்னும் முயற்சி செய்து வருவதாக அது கூறியது.

மருத்துவமனை இஸ்ரேலிய டாங்கிகளால் சூழப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அந்த அமைப்பு முன்பு கூறியிருந்தது. ஆனால் இஸ்ரேல் இராணுவமோ, “தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கை” பற்றிய பிரத்யேகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டது.

காசாவில் கொல்லப்பட்ட 100க்கும் அதிகமான தமது ஊழியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் நேற்று ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியது. உலகெங்கும் உள்ள ஐ.நா அலுவலகங்களில் அதன் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

உலக நாடுகளிடையே தொடர்ந்தும் பிளவு

ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களுக்காக முற்றுகையில் இருக்கும் பகுதியில் இருந்து பல பொதுமக்களை கொல்வதை நியாயப்படுத்த முடியாது என்று பல நாடுகள் அதிர்ச்சி மற்றும் கோபத்தை வெளியிட்டபோதும் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து பிளவுபட்டு காணப்படுகின்றன.

ஹமாஸை ஒழிப்பதாக சூளுரைத்திருக்கும் இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒன்றை தொடர்ந்து மறுத்து வருகிறது. அவ்வாறான போர் நிறுத்தம் ஹமாஸ் மீண்டும் ஒருங்கிணைவதற்கு உதவும் என்று இஸ்ரேல் கூறுவதோடு அமெரிக்கா அதற்கு ஆதரவை வழங்கி வருகிறது.

“அப்பாவி மக்கள், மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள், துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொள்வதையும் மருத்துவமனைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை. இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலைவன், சி.பி.எஸ். நியுஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

தற்போது மோதல் தீவிரம் அடைந்திருக்கும் வடக்கு காசாவில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இஸ்ரேல் தெற்கு காசா மீது தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இந்நிலையில் காசாவின் எந்தப் பகுதியும் பாதுகாப்பாக இல்லை என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

“வடக்கில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவு, நீங்கள் பிறந்த, உங்களது ஞாபகங்கள் இருக்கும் வீட்டில் இருந்து வெளியேறுவது அல்லது குண்டு வீச்சுக்கு இலக்காவதற்கான தேர்வாக இருந்தது” என்று வடக்கு காசாவில் உள்ள ஜபலியா அகதி முகாமில் தங்கி இருக்கும் 42 வயதான அஹது என்பவர் தொலைபேசி மூலம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“ஜபலியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் வெளியேறவில்லை. அவர்கள் வெளியேற விரும்பவில்லை. இஸ்ரேல் வடக்கு மற்றும் தெற்கு என்று வேறுபடுத்தி பார்ப்பதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள பல வீடுகள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியது. ஒரு தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாசர் மருத்துவமனைக்கு மக்கள் தனிப்பட்ட வாகனங்களில் சிறுவர்கள் உட்பட காயப்பட்டவர்களை அழைத்து வருகின்றனர். “இடிபாடுகளுக்குக் கீழ் இறந்த சடலங்கள் உள்ளன, எமக்கு அம்புலன்ஸ் வண்டிகள் தேவையாக உள்ளன” என்று ஒருவர் அழுதபடி கூறினார்.

பிராந்தியத்தில் மோதல் தீவிரம் அடையும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பரஸ்பரம் சண்டையிட்டு வருவதோடு ஈரான் மற்றும் சிரியாவில் இருந்து ஈரான் ஆதரவு குழுக்கள் அமெரிக்கப் படைகள் மீது குறைந்தது 40 ஆளில்லா விமானம் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளன. சிரியாவில் ஈரான் ஆதரவு குழு மீது அமெரிக்கா கடந்த ஞாயிறன்று (12) இரு வான் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT