பெண்களின் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு உருவாக்கும் குடும்ப சீர்கேடுகள்! | தினகரன்

பெண்களின் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு உருவாக்கும் குடும்ப சீர்கேடுகள்!

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோகம் எமது நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வதில் எமது பெண்கள் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். சரியான தொழில்வாய்ப்பைப் பெற முடியாத நிலையில் உள்ள ஆண்கள் தமது மனைவியையும், வயதுக்கு வந்த பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிலும் வீட்டுப் பணிப்பெண்களாகத்தான் இவர்கள் அனுப்படுகின்றனர். குடும்பக் கஷ்டம் காரணமாகவே இவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குடும்பப் பாரத்தை சிறிதளவேனும் குறைப்பதே இவர்கள் இப்பயணத்தை மேற்கொள்ளக் காரணம் எனக் கொள்ள வேண்டியுள்ளது.

படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கே தொழில்வாய்ப்பு குதிரைக் கொம்பாகக் காணப்படும் இன்றைய நிலையில் உரிய கல்வியை பெற்றுக் கொள்ளாதவர்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு பணிப்பெண்களாக எமது நாட்டுப் பெண்கள் தினமும் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற ஆசைகாட்டி பலர் பணிப்பெண்களாக அனுப்பப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு போனதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் சொல்லும் தரமன்று. இது இன்று சர்வசாதாரணமான விடயமாக மாறியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இலங்கைப் பெண்கள் பணிப்பெண்களாக வேலைவாய்ப்புப் பெற்று செல்வதால் அவர்களது குடும்பங்களில் ஏற்படக் கூடிய சீரழிவுகளை காணக்கூடியதாக உள்ளது. பணிப்பெண்களாக செல்லும் தாய்மார்கள் தமது பிள்ளைகளை தகப்பனிடமோ, உறவுகளிடமோ விட்டுச் செல்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு தாயன்பு கிட்டுவதில்லை. ஆரம்பத்தில் உறவுகள் அன்பு காட்டினாலும் காலப் போக்கில் நிலைமைகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகின்றது. மனஅழுத்தம் காரணமாக விரக்தி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பெண் பிள்ளைகள் தந்தையிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என நம்பிய போதிலும், அவை வேறுவிதமாகவே நடக்கின்றன. தந்தை இங்கு மறுமணம் செய்து கொள்ளும் அநியாயம் நடக்கிறது. அல்லது வேறு பெண்களுடன் அவர்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கின்றனர். சின்னஞ் சிறிசுகளின் வாழ்க்கை கருகிப் போன சம்பவங்கள் பல நடந்துள்ளன.

வேலைவாய்ப்புப் பணியகம் என்னதான் சட்டங்களை போட்டாலும் அவை உரிய முறையில் பின்பற்றப்படுவதாகக் காணப்படவில்லை. குடும்பக் கஷ்டங்களை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் பெண்கள் பணிமுடிந்து நாடுதிரும்பும் போது இங்கு குடும்பம் கெட்டுச் சீரழிந்து போயுள்ளதையே காண முடிகிறது. இதன் பின்விளைவு என்னவென்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாதுள்ளது.

வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை அங்கீகரித்தாலும் பெண்களை பணிப்பெண்களாக அனுப்பும் விடயத்தில் அரசு மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சட்ட திட்டங்கள் இறுக்கமானதாக இருக்க வேண்டும். ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது. முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குடும்பங்கள் சீரழிவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போது சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். பணத்தாசை பிடித்த குடும்பத் தலைவர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுப்பதே இதற்கு பிரதான காரணமாகும்.

இங்கு இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பணிப்பெண்களாகச் செல்லும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் அங்கு பாதிக்கப்பட்டு வரக்கூடிய அவலமும் காணப்படுகின்றது. ஒளிமயமான எதிர்காலத்துக்காக வெளிநாடு சென்றவர்கள் ஒளியிழந்து இருண்ட வாழ்வைச் சுமந்து வரும் நிலையே காணப்படுகின்றது. தற்கொலைகள் கூட இடம்பெறுகின்றன.

எனவே இவ்விடயம் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தளவு எமது பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு மாற்றீடாக புதிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உள்ளூரில் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்து உதவிகளை வழங்க முடியும்.

வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு கைகொடுத்துதவ முன்வர வேண்டும் கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதில் எவ்வித பயனும் கிட்டப் போவதில்லை. அரசு மட்டுமல்ல, தொண்டு நிறுவனங்களும் இதில் பங்களிப்புச் செய்ய முடியும், குடும்பத் தலைமைகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், குடும்பங்கள் சீரழிவதற்கு இடமளிக்கக் கூடாது. மனது வைத்தால் இந்தச் சவாலை நிச்சயமாக வெற்றி கொள்ள முடியும் என்பதை உறுதிபட நம்புவோமாக.


Add new comment

Or log in with...