Home » ஊடகத்துறை வித்தகர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசீர் அப்துல் கையூம்

ஊடகத்துறை வித்தகர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசீர் அப்துல் கையூம்

by damith
November 14, 2023 10:23 am 0 comment

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா விரைவில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவினையொட்டி மாகாண மட்டத்தில் உள்ள துறைசார்ந்தோர் தெரிவு செய்யப்பட்டு இவ்விலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்ட துறைசார்ந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதான வித்தகர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டின் ஊடகத்துறை வித்தகர் விருதுக்கென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் பிரதிப் பணிப்பாளர் பசீர் அப்துல் கையூம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மருதமுனையைச் சேர்ந்த பசீர் அப்துல் கையூம் 1968.02.05 இல் பிறந்தவர். மர்ஹூம் முஹம்மது பஷீர்_ உம்மு ஸல்மா தம்பதியரின் புதல்வரான இவர், இளம் வயது முதல் ஊடகத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் மற்றும் ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான அவர், அப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினரின் நன்மதிப்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டவராவார்.

இவர் 1987 ஆம் ஆண்டு பாடசாலை கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய ‘இளைஞர் பரிசளிப்பு விழாவில்’ தேசிய ரீதியிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவிடமிருந்து விஷேட விருது பெற்றுக் கொண்டவர்.

இவர் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் தொடர்ச்சியாக தனது திறமைகளை வெளிக்காட்டி பல்வேறு பரிசில்கள் பாராட்டுதல்கள் மற்றும் விருதுகள் போன்றவற்றை பெற்றுக் கொண்டார். பேச்சு, அறிவிப்பாளர், விவாதம் மற்றும் பொது அறிவு ஆகிய போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை இவர் தனதாக்கிக் கொண்டவர்.

1990ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அறிவிப்பாளர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்டவர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான இவர், இப்பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் உபதலைவராகவும், சங்கீத நாட்டிய சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக இணைந்து கொண்டார். தனது பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் 1996 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையில் ‘நிகழ்ச்சித் தயாரிப்பாளரானார்.

நிகழ்ச்சி அமைப்பாளர், சிரேஷ்ட நிகழ்ச்சி அமைப்பாளர், பதில் கட்டுப்பாட்டாளர், கட்டுப்பாட்டாளர், பிரதிப் பணிப்பாளர் என உயர் பதவிகளை அவர் வகித்தார்.

2005 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவை நிலையமான பிறை எப்.எம்.வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் முதலாவது கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டு அன்று முதல் இன்றுவரை இப்பதவியில் இருந்து வருகின்றார்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2017 ஆம் ஆண்டு ‘கலைஞர் சுவதம்’ விருது இவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு, பொதுஅமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் இவரது சேவைக்காக கலைமாமணி, தியாகத் தென்றல், கலைத் தீபம், மகா உன்னதன், கலையொலி, திறனாளி, கருக்கொடி மகுடம், ஊடக ஒளி மற்றும் தேச அபிமானி போன்ற பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

கொரோனா காலப்பகுதி மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சூழ்நிலைகளில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய சுகாதார பின்பற்றுதல்கள், வாழ்க்கை நடைமுறைகள் போன்றவற்றை வானொலி மூலம் வழங்கி மக்களை சிறந்த முறையில் வழிப்படுத்ய பெருமையும் இவரைச் சாரும். இலங்கை வானொலி பிறை எப்.எம்.சேவையில் தினமும் ஒலிபரப்பாகி வரும் ‘செய்தி மஞ்சரி’ எனும் நிகழ்ச்சியின் ஆரம்பகர்த்தா இவராவார்.

எம்.ஏ.றமீஸ் (அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT