முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே இலக்கு
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கை- மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸை நேற்றுக் காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நீல் கவனாஹ் ஒபேயும் பங்கேற்றிருந்தார்.
அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளின் பாதிப்புக்களிலிருந்து அந்த சமூகம் இன்னும் விடுபடாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த அரசிலும் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. கண்டிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ உரிய வேளையில் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிகள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த சம்பவங்களைத் தொடர அனுமதிக்க வேண்டாமென்று இலங்கை அரசுக்கு, பிரித்தானியா எடுத்துரைத்து, இன நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன நல்லிணக்கம் என்பது, நிறுவனங்களையோ, தாபனங்களையோ உருவாக்கி அதன்மூலம், எதிர்பார்த்தஅடைவைப் பெறமுடியாது. அரசியல்வாதிகளாலோ, மதத் தலைவர்களாலோ வெறுமனே இன சௌஜன்யத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற கோட்பாடு வெற்றியளிக்கப் போவதில்லை.
30 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கை பிரதேசத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களில் 30 சதவீதமானோரே, தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியோரை மீள்குடியேற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
There is 1 Comment
கண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு
Pages
Add new comment