ஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல் | தினகரன்

ஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்

ஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் மைக்கல் பெரேரா விலகல்-UNP W Committee Approved Posts-Joseph Michael Perera Resigned

 

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை அக்கட்சியின் செயற்குழு அங்கீகரித்துள்ளது.

நேற்றைய தினம் (25) ஐ.தே.கவின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் கூடிய போது இம்முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பில் இன்று (26) ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகோத்தவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார்.

கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், பொருளாளர் ஹர்ச டி சில்வா, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தொடர்பாடல் செயலாளராகவும், அமைச்சர் அஜித் பி பெரேரா தொழிற்சங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, ஐ.தே.க.வின் உப தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கட்சியின் செயற்குழுவிலிருந்து தான் இராஜினமா செய்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அனைத்து பதவிகள் தொடர்பான முன்மொழிவுகளையும் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...