16 சு.க. உறுப்பினர்கள்: எதிர்த்தரப்பில் தனிக்குழுவாக செயற்பட உறுதி | தினகரன்

16 சு.க. உறுப்பினர்கள்: எதிர்த்தரப்பில் தனிக்குழுவாக செயற்பட உறுதி

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் தனிக்குழுவாக செயற்படுவது உறுதியென பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் வந்து இணைந்து கொண்டாலும் எமது 16 பேரினதும் நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கம் அமைக்க வேண்டுமென்றும் சுதந்திரக் கட்சி எதிரணியாக செயற்பட்டு ஐ.தே.கவை கவிழ்க்க வேண்டுமென்பதே எமது விருப்பமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி 2020 இல் தனி அரசாங்கம் அமைப்பதே தங்களது இலக்கு என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, சாதகமான சூழ்நிலை அமையுமாக இருந்தால் 2020 இற்கு முன்னரும் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க தயார் என்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...