எதிர்த்தரப்பில் சேர்ந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவே முடியாது | தினகரன்

எதிர்த்தரப்பில் சேர்ந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவே முடியாது

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்துவிட்டு அமைச்சுப் பதவிகளைத் துறந்த 16 சுதந்திரக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்தாலும் அவர்களால் பிரதான எதிர்க்கட்சியாக வரவும் முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறவும் முடியாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அப்படி பிரதான எதிர்க்கட்சியாக வரவேண்டுமானால் தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் எனக் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசின் உடன்படிக்கையின் கீழ் சுதந்திரக்கட்சி இயங்கும் வரை அக்கட்சியால் எதிர்க்கட்சியாக இயங்க முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி நடத்த வேண்டுமென தாம் வலியுறுத்தி வருகின்ற போதிலும் ஜனாதிபதியும், பிரதமருமே தேசிய அரசில் தொடரவே விருப்பம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆளும் தரப்பிலிருந்து சுதந்தரக்கட்சி உறுப்பினர்கள் யார் வெளியேறினாலும் அவர்களால் பிரதான எதிர்க்கட்சியாகவர முடியாது. அத்துடன் மொட்டுக் கட்சி குறித்து தாம் அலட்டிக்கொள்ளவில்லை. அக்கட்சி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய அரசு தொடரும் போது அடுத்துவரக்கூடிய ஒன்றரை வருடங்களும் சவால் மிக்கதாகவே அமையும். அமைச்சுப் பதவி கோர வேறு அணுகூலங்களோ இங்கு முக்கியமல்ல. மக்கள் நம்பிக்கைகொள்ளக் கூடிய வகையில் அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அரசு சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே இது சாத்தியப்பட முடியும். கடந்த காலத்தோடு ஒப்பிட்டு நாம் மாற வேண்டும். எம்மிடம் மாற்றமேற்படாது போனால் எதிர்காலம் சவாலுக்குரியதாகவே தொடரும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஒரு உண்மையை கண்டுகொண்டோம். 16 சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் எங்கு நிற்கிறார்கள் என்பதே அது. மொட்டுத்தரப்பும் சு. க. 16 பேர் அணியும் ஒன்று சேர்ந்தால் கூட ஆட்சி மாற்றமேற்படப் போவதில்லை. ஏன் எதிர்க்கட்சியாகக்கூட அவர்களால் வர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு குறித்து கேட்கப்பட்ட போது பதிலளித்த அவர், இம்மாதம் 30ஆம் திகதியாகும் போது கட்சியில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அவசரப்பட வேண்டாம். கட்சி புதுப்பாதையில் பயணிக்கும் நாள் விரைவில் வரத்தான் போகிறது. இன்று அல்லது நாளை முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படலாம். கட்சியத் தலைமைத்துவத்திலிருந்து மாற்றம் வருவதையே கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுகுறித்து மறுசீரமைப்புச் சபையும், மத்திய செயற்குழுவும் கூடி முடிவெடுக்கும். முக்கியமாக தவிசாளர் உபதலைவர், பிரதித்தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் உடனடி மாற்றம் வரவுள்ளது.

அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி விகிப்பதால் அப்பதவியில் இருக்கும் வரை கட்சித் தலைவராக அவரே இருக்கக் கூடிய வாய்ப்புள்ளது. ஒற்றுமையுடன் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. கட்சிக்கு மக்கள் ஆதரவை அதிகரிப்பதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கட்சியை பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாட்டை மீண்டுமொருதடவை சர்வாதிகாரக் கும்பலிடம் ஒப்படைக்க முடியாது. இது விடயத்தில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம் 


Add new comment

Or log in with...