கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி | தினகரன்

கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல்: 10 பேர் பலி

 

கனடாவின் மிகப்பெரிய நகரான டொரொன்டோவில் நபர் ஒருவர் வேன் வண்டியை பாதசாரிகள் மீது வேகமாக செலுத்தி வேண்டுமென்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கனடா நேரப்படி கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் வெள்ளை நிற வேன் வண்டி பரபரப்பான வீதியின் தடையை தாண்டி பாதசாரிகள் மீது மோதியுள்ளது. வாகனத்தை மோவிட்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியபோதும் குறுகிய தூரத்தில் வைத்து பிடிபட்டுள்ளார்.

25 வயதான அலெக் மினசியன் என்ற சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்பட்டபோதும், அவர் பொலிஸாரிடம் தமது தலையில் சுடும்படி கூச்சலிட்டதால் இழுபறி ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று டொரொன்டோ பொலிஸ் பிரதானி மார்க் சோன்டர்ஸ் திங்கட்கிழமை மாலை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனால் தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். எனினும் சம்பவத்தை பார்த்தவர்களின் சாட்சியங்களை வைத்து பார்க்கும்போது இது வேண்டுமென்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று அந்த பொலிஸ் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார். வாடகைக்கு பெறப்பட்டிருக்கும் வேன் வண்டி மோத வரும்போது வேகமாக செலுத்தப்பட்டதாக சாட்சியங்கள் கூறியுள்ளன.

“அவர் ஒருவர் பின் ஒருவராக மோதிக்கொண்டு நடைபாதையில் செல்ல ஆரம்பித்தார்” என்று சம்பவத்தை பார்த்த அலெக்ஸ் ஷெகர் என்பவர் தொலைக்காட்சி செய்தி ஒன்றுக்கு விபரித்துள்ளார்.

மக்கள், தீயணைப்பு கருவி, தபால் பெட்டிகள் என அனைத்தையும் அந்த வாகனம் இடித்து தள்ளியதாக அந்த வாகனத்திற்கு பின் தனது வாகனத்தை செலுத்தி வந்த நபர் தெரிவித்தார். மேலும் ஆறு அல்லது ஏழு பேர் வாகனத்தால் இடிக்கப்பட்டு காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு பரிட்சையமற்றவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வேன் வாடகைக்கு எடுக்கப்பட்ட நிறுவனம் அது தங்களுடைய வாகனம் என்றும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. 


Add new comment

Or log in with...