ஹொரணை சம்பவம்; கைதான இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

ஹொரணை சம்பவம்; கைதான இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

ஹொரணை சம்பவம்; கைதான இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு-horana-rubber-factory-accident-suspects further remanded

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 50,000 நஷ்டஈடு

ஹொரண, பெல்லபிட்டிய இறப்பர் தயாரிப்பு தொழிற்சாலையில் அமோனியா தாங்கி விபத்து சம்பவம் தொடர்பில் கைதான தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் அதன் சிரேஷ்ட ஆய்வக கட்டுப்பாட்டாளருக்கு நாளை மறுதினம் (27) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இறப்பர் தொழிற்சாலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, பாதுகாப்பற்ற வகையில் செயற்பட்டமை மற்றும் அதன் காரணமாக ஐவர் உயிரிழந்தமை தொடர்பில் குறித்த இருவரையும் ஹொரணை பொலிசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, அதே தினத்தில் குறித்த முகாமையாளரும் ஏப்ரல் 21 ஆம் திகதி குறித்த பெண் சிரேஷ்ட ஆய்வக கட்டுப்பாட்டாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தின்போது குறித்த தொழிற்சாலையின் அமோனியா தாங்கிக்குள் வீழ்ந்த நபர் ஒருவரும் அவரை காப்பாற்றச் சென்ற ஊழியர்கள் நால்வரும் உயிரிழந்ததோடு, 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (25) ஹொரணை பதில் நீதவான் சந்தன விஜேசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் இருவருக்கும் இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 50,000 நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான், குறித்த நஷ்டஈட்டை இன்றே வழங்குமாறும் உத்தரவிட்டார்.

தொழிற்சாலையின் உரிமையாளரை ஹொரணை பொலிசில் ஆஜராகுமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) உத்தரவிட்டிருந்ததோடு, அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தொழிற்சாலை உரிமையாளர் இது வரை பொலிசில் முன்னிலையாகாத நிலையில், அவர் குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த தொழிற்சாலை உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய செயற்படவில்லை என தெரியவந்ததை அடுத்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, தொழிற்சாலைக்கும் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...