Friday, March 29, 2024
Home » சுரங்கப்பாதை இடிந்து வீழ்ந்ததில் 40 பேருக்கு நேர்ந்த கதி தெரியவில்லை!

சுரங்கப்பாதை இடிந்து வீழ்ந்ததில் 40 பேருக்கு நேர்ந்த கதி தெரியவில்லை!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரிதாபம்!

by damith
November 14, 2023 8:44 am 0 comment

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணிகள் 24 மணிநேரத்தை தாண்டி நேற்றுப் பிற்பகலும் நீடித்தது. சுரங்கப் பாதையில் சிக்கிய 40 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியாததால் பதற்றம் நீடிக்கிறது. இமயமலை மாநிலமான உத்தரகாண்ட்டில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது. உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா- தண்டல்கான் கிராமங்களை இணைப்பதற்காக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்றுமுன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. இந்த சுரங்கப் பாதை பணியில் 40 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதனையடுத்து சுரங்கப் பாதை இடிந்து விழுந்தது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்றுப் பிற்பகல் வரை தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரகாண்ட் சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கியவர்கள் பீகார், இமாச்சல், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஜேசிபி, இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமியை பிரதமர் மோடி அழைத்து மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து முதல்வர் புஷ்கர் தாமி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு உணவு உள்ளிட்டவை உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றன. அனைவரையும் பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT