தடைகளை நீக்கினால் டிசம்பர் முற்பகுதியில் மாகாண சபை தேர்தல் | தினகரன்

தடைகளை நீக்கினால் டிசம்பர் முற்பகுதியில் மாகாண சபை தேர்தல்

தேர்தலை நடத்த 4 வழிமுறைகள்

சட்டரீதியாக காணப்படும் தடைகள் நீக்கப்பட்டால் மாகாணசபைகளுக்கான தேர்தலை டிசம்பர் மாத முதற்பகுதியில் நடத்த முடியும். அதற்குத் தேவையான சூழலை அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள் உள்ளன. இந்த நான்கு வழிகளில் ஒன்றை தெரிவுசெய்து பாராளுமன்றம் அங்கீகரிக்குமாயின் ஏற்கனவே கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகள் மற்றும் எதிர்வரும் செப்டெம்பரில் முடியவுள்ள மூன்று மாகாண சபைகள் உள்ளடங்கலாக ஆறு மாகாண சபைகளின் தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்த முடியும் என அவர் கூறினார்.

மாகாண சபைகள் குறித்த எல்லைநிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுதல் அல்லது பிரதமரால் நியமிக்கப்படும் குழுவினால் எல்லை நிர்ணயத்தை மீளாய்வுசெய்தல் அல்லது ஐம்பதுக்கு ஐம்பது என்ற தேர்தல் முறையை மாற்றி விரைவில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளல் அல்லது புதிய தேர்தல் முறைக்குப் பதிலாக பழைய தேர்தல் முறைக்குச் செல்வதாக சட்டத்தை நிறைவேற்றல் ஆகிய நான்கு மாற்று வழிகள் காணப்படுகின்றன. இந்த நான்கு மாற்று வழிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுமதி அங்கீகரித்தால் மாகாணசபைத் தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்த முடியும் என்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இழுத்தடிக்கவில்லை. தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு உள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் காணப்படும் சட்டசிக்கல்களை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத கட்சிகள் என சகல கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணசபைகளின் ஆயுட்காலங்கள் முடிவடைந்தன. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவற்றுக்கான வேட்புமனுக்களைக் கோர தயாரான நிலையிலேயே பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த திருத்தமும் உள்ளடக்கப்பட்டது. சட்டத்திருத்தத்துக்கு அமைய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை பெப்ரவரி மாதம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும். இல்லையாயின் பிரதமரால் நியமிக்கப்படும் குழு எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்து மீண்டும் சபையில் அங்கீகரிக்கப்பட்டவேண்டும். அதுவும் இல்லாவிட்டால் ஐம்பதற்கு ஐம்பது என்ற புதிய தேர்தல் முறை குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டு விரைவில் மீண்டும் எல்லைநிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் பழைய தேர்தல் முறையான விகிதாசார முறைக்குச் செல்வதற்கான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த நான்கு மாற்று வழிகளில் ஏதாவது ஒன்றை பாராளுமன்றம் நிறைவேற்றினால் தேர்தலை நடத்த முடியும்.

மக்களின் வாக்களிக்கும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும். மூன்று மாதகாலத்துக்குள் இந்த மாற்றங்களை மேற்கொள்ள முடியும். மாறாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு காரணம் தேடுவதாயின் ஏதாவது ஒன்றை காரணமாகக் கூறிக் கொண்டே இருக்க முடியும் எனவும் கூறினார்.

பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளது. அதிகாரிகளால் நிர்வாகம் நடத்தப்படுமாயின் அது ஏகாதிபத்தியவாதமாகும். இதற்கு இடமளிக்காது தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முறையை மாற்றும் அதிகாரம் எதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. பாராளுமன்றமே தேர்தல் முறை பற்றிய தீர்மானங்களை எடுக்கிறது. அங்கு முடிவொன்றை எடுத்து இந்தத் தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துமாறு தெரியப்படுத்தினால் தாங்கள் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டால் மூன்று மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியும். டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறைகளுக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...