மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை | தினகரன்

மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை

 

இலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு மக்களிடம் விடுத்து இருக்கின்றார். அதுதான், 'உலகில் சுமார் நூறு நாடுகளில் மலேரியா நோய் காணப்படுவதாகவும் அந்நாடுகளுக்கு பயணம் செய்யும் இலங்கையர் பயணத்திற்கு முன்னர் மலேரியா தவிர்ப்பு சிக்சிசையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் அவர் கேட்டுள்ளார்.

அதாவது மலேரியா நோயினால் பல தசாப்த காலம் பாதிக்கப்பட்ட இலங்கை 2017 ஆம் ஆண்டில் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் இன்று உலக மலேரியா தினமும் கூட. இவ்வாறான சூழலில்தான் இந்த வேண்டுகோளை டொக்டர் தேவனி ரணவீர விடுத்திருக்கின்றார். அதன் காரணத்தினால் இந்த வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது.

ஏனெனில் மலேரியா நுளம்புகளால் பரப்படும் ஒரு நோய். அனோபிளஸ் இன நுளம்புகள்தான் இந்நோயைப் பரப்புகின்றன. இந்நுளம்புகள் பார்ப்பதற்கு மிகச் சிறியவையாக இருந்த போதிலும் இந்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இந்நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வந்திருக்கின்றது.

அதாவது 1900ம் ஆண்டு முதலே இந்நாடு மலேரியாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 1934 --, 1935 காலப்பகுதியில் மாத்திரம் 80 ஆயிரம் பேரின் உயிர்கள் இந்நோயினால் காவு கொள்ளப்பட்டதோடு சுமார் பத்து இலட்சம் பேர் இந்நோய்க்கு உள்ளானதாகவும் வரலாற்று பதிவுகள் உள்ளன.

இவ்வாறு கறைபடிந்த வரலாற்றைப் பதித்துக் கொண்ட இந்நோய்க்கு எதிராக அன்று முதல் பொதுமக்கள் அமைப்புக்களும், மருத்துவத் துறையினரும் அரசாங்கமும் தொடராக நடவடிக்கைகளை பரந்தடிப்படையில் முன்னெடுத்து வந்தன.

இதன் பயனாக மலேரியாவுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்ததோடு 2012 ஆம் ஆண்டாகும் போது உள்நாட்டு நுளம்புகளால் இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சிக்கு உள்ளானது. அதாவது 2013 இல் 95 பேரும், 2014 இல் 49 பேரும் இந்நோய்க்கு உள்ளாகினர். இவர்களில் பெரும் பகுதியினர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த சமயம் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய இந்நாட்டு சுகாதாரத் துறையினர் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளனர்.

என்றாலும் 2012 முதலான மூன்று வருட காலப்பகுதியில் இலங்கையில் மலேரியாவின் நி​ைலவரத்தைத் தொடர்ந்து அவதானித்து வந்த உலக சுகாதார ஸ்தாபனம் 'இலங்கை மலேரியா அற்ற நாடு' 2017 இல் என அறிவித்ததோடு அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியது. இது இலங்கையில் மலேரியா ஒழிப்புக்காக பல தசாப்த காலம் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைத்திட்டங்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

அதேநேரம் இந்நாட்டின் உல்லாசப் பயணக் கைத்தொழில் மேம்பாட்டுக்கும் இந்த அங்கீகாரம் பாரிய பின்புலமாகவும் அமையும். அதனால் இதனை உரிய ஒழுங்கில் பேணிப் பாதுகாக்க வேண்டும். இது காலத்தின் அவசியத் தேவையாகும்.

இருப்பினும் அண்மைக் காலமாக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்புவர்களில் மலேரியா நோய்க்கு உள்ளானவர்கள் இருப்பது அவதானிப்பட்டு வருகின்றது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

இலங்கை மலேரியா அற்ற நாடாக விளங்கிய போதிலும் இந்நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளில் கூட இன்றும் மலேரியா நோய் காணப்படவே செய்கின்றது. அதனால் மலேரியா தவிர்ப்புக்கான முன்னேற்பாட்டு சிகிச்சைகளைப் பெறாது அந்நாடுகளுக்கு சென்று வரும் போது மலேரியா தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது.

அவ்வாறு வெளிநாடுகளில் காணப்படும் மலேரியா நோய்த் தொற்றுக்கு உள்ளாவது அதிகரிக்குமாயின் அது இந்நாட்டில் மலேரியா மீண்டும் தீவிரமடைய வழிவகுக்க முடியும். அது ஏற்கனவே காணப்பட்ட மலேரிய நோய் அச்சுறுத்தலாக இருக்கமா அல்லது அதை விடவும் மோசமான நிலைமையை அது அடையுமா என்ற அச்சம் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் நிலவவே செய்கின்றது. இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு தான் டொக்டர் ரணவீர இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.இது வரவேற்கத்தக்க வேண்டுகோள் ஆகும்.

ஆகவே வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் பயணத்திற்கு முன்பே மலேரியா தவிர்ப்பு சிகிச்சைகளைக் பெற்றுக் கொள்ளத் தவறக் கூடாது. அது மலேரிய அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்வதற்கு பெரிதும் உதவக் கூடியதாக இருக்கும். அதேநேரம் நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக் கொள்வதிலும் ஒவ்வொரும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது மலேரியா ஒரு அச்சுறுத்தலாகவே இராது.


Add new comment

Or log in with...