அன்பும் மக்களுக்கான பணியுமே இறைவன் விரும்பும் பண்புகள் | தினகரன்

அன்பும் மக்களுக்கான பணியுமே இறைவன் விரும்பும் பண்புகள்

பகவான் - சத்யசாயி பாபாவின் மகா சமாதி தினம் இன்று

உலகை உய்விக்கத் தோன்றிய ஒளிவிளக்காகத் திகழ்பவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள். தர்மத்தை அனுசரித்து, காலத்துக்கு ஏற்றவாறு கலாசாரத்தையும் ஆன்மிக வழிபாட்டின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தத் தோன்றிய ஓர் அவதார புருஷர் பகவான் பாபா.

தர்மத்தை நிலைநாட்டவும், உலகில் நல்லவர்களைக் காக்கவும், தீய செயல்கள் புரிவோரை திருத்தி, வழிநடத்தவும் கடவுளே மானிடராக மண்ணில் அவதரிப்பது என்பதுதான், அவதார புருஷர் என்பதன் பொருள் ஆகும்.

உலகில் தர்மம் இல்லை என்றால், மனித இனமானது போட்டி, பொறாமை, புறம் பேசுதல் ஆகிய குணாம்சங்களை மேற்கொண்டு,விலங்கின வாழ்க்கைக்குச் சமமாக மாறிவிடும். எனவேதான், உலகில் தர்மம் தாழ்வு நிலை அடையும் போதெல்லாம் இறைவனே மானிடராகத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டி அதைக் காப்பாற்றி வருகின்றார்.

கடவுள் உலகில் அவதாரம் எடுக்கும் போது, தனது உண்மை உருவத்துடன் தோன்றுவது இல்லை என புராணங்களில் நாம் படித்ததுண்டு. அதற்குக் காரணம் என்னவென்றால், இறைவன் மண்ணில் தனது நிஜ வடிவத்துடன் தோன்றினால், இறைவனுடைய ஆற்றலை மக்கள் தாங்க இயலாது எனவும் புராண இதிகாசங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவன் தனதுஆற்றலால் அற்புதங்களை செய்து காட்டினாலும், அவற்றைக் கண்டு ரசிக்கும் மக்கள், சித்து விளையாட்டுக்களை செய்யும் ஒருவராகவே இறைவனை எண்ணுவார்கள். எனவேதான், கடவுள் மானிட அவதாரம் எடுத்து, அப்பிறவிக்குரிய இன்பதுன்பங்களைத் தானும் அடைந்து கொள்கிறார்.

தூய உள்ளமும், இறைபற்றும் உள்ளவர்களால்தான் அவதார புருஷர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலும். அத்தகைய அவதார புருஷராகத் தோன்றிய மகானே, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என சைவ சித்தாந்தம் கூறுகின்றது. இதனை உலகினில் மீண்டும் நிலைநாட்ட அவதரித்தார் பகவான் பாபா. உயிர்கள் அனைத்தும் இறைவனின் குழந்தைகளே என்பது பாபாவின் கருத்து.

பகவான் பாபா அருளுரை ஆற்றுகின்ற போதெல்லாம், அதில் அதிகமாக இடம்பெறுவது, அன்பையும் சேவையினையும் அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களேயாகும் என்பதை அனைவரும் அறிவர்.

“உண்மை அன்பு என்பது, தன்னைப் போல் பிறரையும் நேசிப்பது போன்றது; அவ்வாறு வாழ்வோமானால் பொய், போட்டி, பொறாமை போன்ற தீய குணங்கள் எம்மிடம் காணப்படா, எம் இன்பத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது எமது வாழ்க்கை இனிமை நிறைந்ததாகக் காணப்படுகின்றது.”

“ஒவ்வொரு உயிரையும் கடவுளின் வடிவமாகவே நாம் எண்ண வேண்டும். நாம் மற்றவரிடம் அன்பை மட்டும் பொழிவதோடு நின்றுவிடாமல், மதிப்பும், மரியாதையும் மிக்கவர்களாகத் திகழ்வதோடு, எம்மிடம் மறைந்து கிடக்கும். தெய்வீகத் தன்மைகளையும் மற்றவர் உணருமாறு செய்தல் வேண்டும்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், அன்பும் சேவையுமாகிய இரண்டு தெய்வீகப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ளானேயானால், இவ்வுலகம் அமைதியும், மகிழ்வும் நிறைந்த ஒரு சொர்க்க உலகமாகக் காணப்படும்” இவ்வாறான கருத்துக்களே பகவான் பாபாவின் அருளுரைகளில் பொதிந்துள்ளன.

 சிவா இராஜஜோதி...  


Add new comment

Or log in with...