புதிய கூட்டத் தொடருக்கான நேரம் வர்த்தமானியில் பி.ப. 2.15 | தினகரன்

புதிய கூட்டத் தொடருக்கான நேரம் வர்த்தமானியில் பி.ப. 2.15

 

சட்டச்சிக்கலுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி

* சிம்மாசன உரையல்ல கொள்கைப் பிரகடன உரை
* எதிரணி கோரினால் வாக்ெகடுப்பு நடத்தலாம்
* சாதாரண பெரும்பான்மை போதுமானது

புதிய பாராளுமன்ற கூட்டத் தொடருக்கான இரண்டாவது வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையொப்பமிட்டார். பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கேற்ற பின்னர் நேற்று நாடு திரும்பிய உடன் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

கடந்த 12 ஆம் திகதி பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தாமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது. இது தொடர்பில் சட்டசிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. பாராளுமன்றம் கூடும் நேரம் இதில் குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில் மே 8 ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு இரண்டாவது பாராளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என நேற்று வெளியிடப்பட்ட இரண்டாவது வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வைபவ ரீதியாக இரண்டாவது அமர்வு  நடத்தப்பட இருப்பதோடு ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்ற இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே 8 ஆம் திகதி ஜனாதிபதியினால் சிம்மாசன உரையாக இல்லாமல் கொள்கை பிரகடன உரையே நிகழ்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உரையின் மீது வாக்கெடுப்பு நடத்த யாராவது கோரினால் அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் வாக்கெடுப்பில் குறித்த யோசனை வெற்றிபெற்றால் அமைச்சரவை கலைய நேரிடும் எனவும் இது தொடர்பில் அரசியலமைப்பின் 48 (2) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஜெயதிலக தெரிவித்தார்.

ஆனால், 19 ஆவது திருத்தத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவுக்கு உட்பட்டதாகவே 48(2) பிரிவை செயற்படுத்த வேண்டியிருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மே மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தை தோற்கடிக்க எதிரணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த உதவி செயலாளர் நாயகம், அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே இது தொடர்பில் செயற்பட முடியும் என்றார்.

அரசியலமைப்பின் 48(2) சரத்தின் பிரகாரம் வரவு செலவுத் திட்டம், நம்பிக்கையில்லாப் பிரேரணை, கொள்கை விளக்க உரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தோல்வியடைந்தால் அதனால் அமைச்சரவைக்கு மீதான நம்பிக்கை இழக்கப்படும். இதன் காரணமாக பாராளுமன்றத்தை கலைக்க நேரிடும் என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மற்றொரு பாராளுமன்ற உயரதிகாரி கொள்கை பிரகடன உரையை சபாநாயகரின் ஆசனத்தில் இருந்தே நிகழ்த்த ​வேண்டும் எனவும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் இருந்து இதனை நிகழ்த்தும் சம்பிரதாயம் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே சகல செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் எனவும் கொள்கை பிரகடன உரை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேறினால் அமைச்சரவை கலைய நேரிடும். பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியும் என 48 (2) சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால், 70 ஆவது பிரிவின் பிரகாரம் 4 1/2 வருடங்கள் வரை ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை எம்பிகளின் ஆதரவுடன் யோசனை நிறைவேற்றினாலே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கு உட்பட்டதாக தான் 48(2) பிரிவை செயற்படுத்த நேரிடும்.

சபாநாயகர் விரும்பினால் தான் வாக்கெடுப்பிற்கு அனுமதி வழங்க முடியும் என எங்கும் கூறப்படவில்லை. கொள்கை பிரகடனம் முக்கியமானதா?இல்லையா? என்று பார்த்தே முடிவு செய்யப்படும் என்ற கருத்து தவறானது. வாக்கெடுப்பு கோரினால் அதற்கு இடமளிக்கவே சட்டம் கூறுகிறது என்றார்.

பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானியில் ஓட்டையிருப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் முன்னாள் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திகதி மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. நேரம் இருக்கவில்லை.

இம்முறை வெளியிடப்பட்ட வர்த்தமானியில் முதலில் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. எத்தனை மணிக்கு பாராளுமன்றம் கூடும் என்பது வேறு வர்த்தமானியூடாகவே வெளியிடப்பட்டது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...