அனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு | தினகரன்

அனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு

 பாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த புக்கல் நவாப் என்பவர் அனுமார் கோயிலுக்கு வெண்கல மணியொன்னை காணிக்கையாக அளித்தார். ராமர் கோயில் கட்டவும் ஆதரவளித்த இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உ.பி.யில் பாஜக சார்பில் மேல்சபைக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களில் புக்கல் நவாப் (64) என்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும் ஒருவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்முன் லக்னோவின் ஹஸ்ரத்கன்சிலுள்ள பிரபல அனுமார் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான வெண்கல மணியை நன்கொடையாக அளித்தார். இது உபி முஸ்லிம்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புக்கலை இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக உபியின் தியோபந்தில் உள்ள மதரஸாக்களில் ஒன்றான அஷ்ரபியா ஃபத்வா (சட்ட விளக்கம்) அளித்துள்ளது. இது குறித்து அஷ்ரபியா மதரஸாவின் மௌலானா சலீம் அஷ்ரப் காஸ்மி கூறும்போது, ‘‘சிலை வழிபாட்டை எதிர்க்கும் இஸ்லாத்தில், அல்லாவை தவிர வேறு எவரையும் வணங்குவோர் முஸ்லிம் அல்லாதவர். இதுபோன்றவர்கள் இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவர்’’ எனத் தெரிவித்தார்.

புக்கலின் செயல் சுயவிளம்பரம் என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோவிந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார். கடந்த சமாஜ்வாதி ஆட்சியில் அதன் தலைவர் முலாயம் சிங்கால் உபி மேல்சபை உறுப்பினராக புக்கல் நியமிக்கப்பட்டிருந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்ததால் சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து பாஜகவில் இணைந்த புக்கலை பாராட்டி அக்கட்சி மீண்டும் மேல்சபையில் வாய்ப்பு அளித்தது.இதுகுறித்து புக்கல் நவாப் கூறும்போது, ‘‘முஸ்லிமாக இருந்தாலும் நானும் அனுமாரின் பக்தன். ராமரைப் போல் அனுமாரையும் நம் முன்னோர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற அனுமதி உள்ளது. இருமதங்களை பிரிக்கும் இதுபோன்ற ஃபத்வாக்கள் பற்றி நான் எப்போதும் கவலைப்படவில்லை’’ எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...