Wednesday, April 24, 2024
Home » கல்லடி பிரதேச பாடசாலைகளில் 15 மாணவர்களுக்கு பார்வைக் குறைபாடு

கல்லடி பிரதேச பாடசாலைகளில் 15 மாணவர்களுக்கு பார்வைக் குறைபாடு

by damith
November 14, 2023 9:55 am 0 comment

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கல்லடி மற்றும் மஞ்சந்தொடு வாய் பிரதேசங்களிலுள்ள 6 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையின்போது 15 மாணவர்கள் பார்வைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலவச கண் பரிசோதனை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது.

இதில் தரம் இரண்டில் கல்வி கற்கும் 127 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையின் போது 15 மாணவர்கள் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகளும், விசேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் சிறிகாந்தன் தலைமையிலான வைத்திய குழுவினரால் தரம் இரண்டு மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையிலேயே 2023ஆம் ஆண்டுக்கான, இலவச கண் பரிசோதனை முகாம் சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியத்தின் தலைவர் விசேட கண் சத்திர சிகிச்சை​ வைத்திய நிபுணர் சிறிகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் அண்மையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கல்லடி பிரதேசத்துக்குட்பட்ட 06 பாடசாலைகளின் தரம் இரண்டு மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் இடம்பெற்றதுடன் கண் பிரச்சினைகள் இனம் காணப்பட்ட மாணவர்களுக்கான மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிவானந்தா, விவேகானந்தா பாடசாலைகளின் அதிபர்கள், சிவானந்தா பாடசாலை பழைய மாணவ சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி மற்றும் சிவானந்தா, விவேகானந்தா மாணவ ஒன்றிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவனமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கண் பரிசோதனைக்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT