விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் அன்பளிப்பு | தினகரன்

விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் அன்பளிப்பு

“விளையாட்டுக்கள் அதனை ஆடுகின்ற வீரர்களின் தேகாரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான சமூக அமைப்புக்கும் பெரிதும் பங்காற்றுகின்றன. முரண்பாடுகளால் முட்டி மோதிக் கொள்கின்ற இயக்கங்களும், விரிசல்களை வருந்தி அழைத்து வாழுகின்ற சமூகங்களும் தமக்குள் இணக்கங்களையும், உடன்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாத கையறு நிலை பரவலாக உலகெங்கும் காணப்படுகின்றது.

என அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

இதனால் மனித குலம் வேண்டி நிற்கின்ற அமைதியும், நிம்மதியும் அற்றுப் போயுள்ள அவல நிலையே எங்கும் வியாபித்து உள்ளன.

ஒன்று சேர்ந்து விளையாடுவதும், தம் குழுவின் இதர சகவீரர்களுடன் ஒன்றித்து இயங்குவதும், தம் குழுவின் தலைமையை கௌரவித்துத் தீர்மானம் மேற்கொள்வதும் அதேவேளை எதிர் தரப்பிலிருந்து விளையாடுபவர்களை சட்ட திட்டங்களை அனுசரித்து முறையாக விளையாடி அவர்களை வெற்றி கொள்ள முயற்சிப்பதும் விளையாட்டின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற சிறப்பானகுணாம்சங்களாகும். இவற்றை வேறு வழிகளில் அடைந்து கொள்வது என்பது முடியாத காரியாமாகும்.

எனவே மேற்குறித்த குணாம்சங்களே சமூகங்கள் அமைதியாகவும், நிம்மதியுடனும் வாழ அவசியப்படுகின்றன. இதனை மையப்படுத்தியதாகவே 2018ம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் கருப் பொருளாக “விளையாட்டுக்களின் ஊடாக உல சமாதானம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (8) அக்கரைப்பற்று நகரப்பள்ளி வீதியில் அமைந்துள்ள “யங்ஸ்டார் யூத்ஸ்” கழகத்தின் காரியாலய மண்டபத்தில் அதன் தலைவர் எம்.ஏ.எம். அஸ்மத் சக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய அதிபர் நயீம், அக்கரைப்ப ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ். எம்.எம்.எல். அப்துல் லத்தீபு பஹ்ஜி மற்றும் வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம். சிறாஜ் றஸ்மி அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்தனர்.

விளையாட்டு உபகரணங்களையும், சீருடைகளையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஹனிபா மதனி, “லோட்ஸ் போய்ஸ்” கழகத் தலைவர் எம்.எல்.எம். வலீதிடம் “யங்ஸ்டார் யூத்ஸ்” கழகத் தலைவர் எம்.ஏ.எம். அஸ்மத் சக்கியிடம் வழங்கி வைத்தார். யங்ஸ்டார் யூத்ஸ் கழக உப தலைவர் ரி. பயாத் அஹமட் நன்றி தெரிவித்தார்.

ஒலுவில் மத்திய விசேட நிருபர் 


Add new comment

Or log in with...