ஹொரணை இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் கைது (UPDATE) | தினகரன்

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் கைது (UPDATE)

அமோனியா தாங்கியில் வீழ்ந்தவர், காப்பாற்ற சென்றவர்கள் பலி-Person Fell in to the Ammonia Tank & 4 Others Killed

 

ஹொரண இறப்பர் தொழிற்சாலையில் அமோனியா தாங்கி விபத்து சம்பவம் தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறப்பர் தொழிற்சாலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, பாதுகாப்பற்ற வகையில் செயற்பட்டமை மற்றும் அதன் காரணமாக ஐவர் உயிரிழந்தமை தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் முகாமையாளரை ஹொரணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


அமோனியா தாங்கியில் வீழ்ந்தவர், காப்பாற்ற சென்றவர்கள் பலி (4.27pm)

அமோனியா நிரப்பப்பட்ட தாங்கி ஒன்றினுள் வீழ்ந்தவர் மற்றும் அவரை காப்பாற்ற சென்ற மேலும நால்வர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) பிற்பகல 1.20 மணியளவில் ஹொரணை, பெல்லபிட்டிய பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சம்பவத்தின்போது, அமோனியா கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் திடீரென அமோனியா தாங்கியினுள் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரை காப்பாற்ற அங்கிருந்தோர் முயற்சி செய்துள்ளனர்.  இதன்போது 19 பேர் மயக்கமுற்ற நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஹொரணை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...