சிரியாவை நோக்கி ‘ஏவுகணைகள்’ வருவதாக டிரம்ப் ரஷ்யாவுக்கு செய்தி | தினகரன்

சிரியாவை நோக்கி ‘ஏவுகணைகள்’ வருவதாக டிரம்ப் ரஷ்யாவுக்கு செய்தி

தனது கூட்டாளியான சிரியா மீதான ஏவுகணை தாக்குதல்களுக்கு ரஷ்யாவை தயாராக இருக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக டிரம்ப் ஏவுகணை தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ரஷ்யா தயாராக இருக்கவும் ஏனென்றால் அவை அருமையாக மற்றும் புதிதாக மற்றும் புத்திசாலித்தனமாக வரும்” என்று டிரம்ப் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் எந்த ஒரு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு தூமா நகர் மீது நடத்தப்பட்ட இந்த இரசாயன தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு நிராகரித்து வருகிறது.

லெபனானுக்கான ரஷ்ய தூதுவர் செவ்வாயன்று ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் அல் மனார் தொலைகை்காட்சிக்கு அளித்த போட்டியில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். “அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் ஒன்று இடம்பெற்றால், அமெரிக்க ஏவுகணையை சுட்டு வீழ்த்தவும் ஏவுகணை வீசப்பட்ட தளத்தை தாக்கவும் புடின் மற்றும் ரஷ்ய இராணுவ அதிகாரிகளின் பிரதானி அறிவுறுத்தி உள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் கடந்த புதனன்று வெளியிட்ட ட்விட்டரில் சிரிய தலைவரை “இரசாயனத்தால் கொல்லும் மிருகம்” என்று வர்ணித்திருந்தார். அமெரிக்க மற்றும் ரஷ்ய உறவின் இருண்ட பக்கம் பற்றி அவர் சுட்டிக்காட்டியபோதும் அது அவ்வாறு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதோடு இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இராணுவ தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

டிரம்பின் ட்விட்டருக்கு பதிலளித்திருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா கூறியிருப்பதாவது, “ஸ்மார்ட் ஏவுகணைகள் தனது நிலத்தில் சர்வதேச தீவிரவாதிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடும் (சிரியாவின்) சட்டபூர்வ அரசுக்கு அன்றி தீவிரவாதிகளை நோக்கியே பாய வேண்டும்” என்றார்.

தூமாவில் இடம்பெற்ற குற்றம்்சாட்டப்படும் இரசாயன தாக்குதலில் 70 பேர் வரை கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைக் குழு அமைக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இது தொடர்பில் கடந்த செவ்வாயன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா கடும் வர்த்தைப் போரில் ஈடுபட்டன.

இதனிடையே சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு எதிரான அனைத்து தேர்வுகளும் அவதானிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும் இராணுவ தாக்குதல் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் சாராஹ் சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கெளன்ஸில் நேற்று கூடவிருந்ததோடு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தகர்ப்பு யு.எஸ்.எஸ் டொனால்ட் குக் போர் கப்பல் மத்தியதரைக் கடலில் நிலைகொண்டுள்ளது. 


Add new comment

Or log in with...