ஜனாதிபதி இல்ல புத்தாண்டு நிகழ்வு | தினகரன்

ஜனாதிபதி இல்ல புத்தாண்டு நிகழ்வு

இலங்கை வாழ் மக்களுடன் இணைந்து சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (14) இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்குபற்றினார்.

ஜனாதிபதி, அவரது,  பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்.

பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி , கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார்.
பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு  வாழ்த்துத் தெரிவிப்பதற்கு அமைச்சர்கள், கலைஞர்கள், மற்றும் பெருமளவான பொதுமக்களும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி, அவர்களுக்கு சுபநேரத்தில் விருந்துபசாரமும் வழங்கினார்.

பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, புத்தாண்டில் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் சிறந்த சிந்தனைகளுடன் அனைத்து வகையான பேதங்களையும் மறந்து ஒரே நாட்டு மக்களாக தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் அனைவரும் அணிசேரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.04.14
 


Add new comment

Or log in with...