சிரியா மீது மீண்டும் தாக்கினால் சர்வதேச அளவில் குழப்பம் நேரும் | தினகரன்

சிரியா மீது மீண்டும் தாக்கினால் சர்வதேச அளவில் குழப்பம் நேரும்

மேற்குலகுக்கு புடின் கடும் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் சிரியா மீது மேலும் தாக்குதல்களை நடத்தினால் உலக விவகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி எச்சரித்துள்ளார். எனினும் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க அந்த நாட்டின் மீது மேலும் தடைகளை கொண்டுவர அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஈரான் ஜயாதிபதி ஹஸன் ரூஹானியுடன் தொலைபேசியில் உரையாடி இருக்கும் புடின், மேற்குலக நாடுகளின் தாக்குதல்கள் சிரியாவின் ஏழு ஆண்டு மோதலுக்கு அரசியல் தீர்வு காண்பதை பாதிப்பதாக இணங்கியுள்ளனர் என்று ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்்டுள்ளது.

“ஐ.நா சாசனத்தை மீறி இவ்வாறான வன்முறைகள் தொடர்ந்தால் அது சர்வதேச உறவுகளில் குழப்பத்தை நோக்கி இட்்டுச் செல்லும் என்று புடின் குறிப்பாக வலியுறுத்தினார்” என்று ரஷ்ய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு கூறும்போது, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் குற்றம்சாட்டப்படும் இரசாயன ஆயுத பயன்பாட்டுக்கு தொடர்புடைய உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவிக்கும் என்றார்.

தூமாவில் ஏப்ரல் 7 ஆம் திகதி நடத்தப்பட்டதாக கூறப்படும் நச்சு வாயு தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக சிரியாவின் மூன்று இரசாயன நிலைகள் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் கடந்த சனிக்கிழமை 105 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

பல டஜன் பேர் கொல்லப்பட்ட தூமா தாக்குதலின் பின்னணியில் அஸாத் அரசு இருப்பதாக மேற்கத்தேய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இவ்வாறான தாக்குதல்களில் தொடர்புபட்டதாக கூறுவதை சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா மறுத்துள்ளன. இந்த ஏவுகணை தாக்குதல்கள் அஸாத் மற்றும் அவரது கூட்டாளியான ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய தலையீடாக அமைந்துள்ளது.

சிரியாவின் இரசாயன ஆயுத திறனை கட்டுப்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமே இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள், அஸாத் அரசை கவிழ்க்கவோ அல்லது உள்நாட்டு யுத்தத்தில் தலையிடுவதோ நோக்கமில்லை என்று வலியுறுத்தி உள்ளன.

எனினும் சிரியாவில் இனிமேலும் இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் வேண்டுதலை ஏற்று ஐ.நா பாதுகாப்பு சபை கடந்த சனிக்கிழமை அவசரமாக கூடியபோதே அமெரிக்க தூதுவர் ஹாலே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இதற்கு பதலளித்த ரஷ்ய தூதர் வாசிலி நிபென்ஜியா, “அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. உலகம் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் ஞாயிறன்று கூறினார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிரியாவை விட்டு அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

மக்ரோன்் இவ்வாறு தெரிவித்த பின்னர், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், “அமெரிக்காவின் திட்டம் மாறவில்லை. அமெரிக்கா, படைப்பிரிவுகளை எவ்வளவுக்கு விரைவாக நாடு திரும்ப செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக இதனை நிறைவேற்ற ஜனாதிபதி உறுதியாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

‘சிரியா ஜனநாயக படை’ என்று அழைக்கப்படும் குர்திஷ் இன மற்றும் அரபு ஆயுதப்படையினர் இணைந்து செயல்படும் கூட்டு படைக்கு ஆதரவு தெரிவித்து சிரியாவின் கிழக்கு பகுதியில் 2,000 படையினரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 


Add new comment

Or log in with...