சிரிய அரசு வெளியேற்றிய மக்களை கிளர்ச்சியாளர்களும் ஏற்க மறுப்பு | தினகரன்

சிரிய அரசு வெளியேற்றிய மக்களை கிளர்ச்சியாளர்களும் ஏற்க மறுப்பு

சிரியாவின் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியவாத போராளிகளை வடக்கு சிரிய நகரான அல் பாபுக்குள் நுழைய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அனுமதி மறுத்த நிலையில் பல டஜன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயிஷ் அல் இஸ்லாம் கிளர்ச்சியாளர்களின் 1,300 போராளிகள் உட்பட சுமார் 3,800 பேர்கள் அடங்கிய வாகனத் தொடரணி ஒன்று வடக்கு மாகாணமான அல் அலப்போவின், அல் பாப் நகரின் நுழைவாயிலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

“அரச படையின் கடைசி சோதனைச் சாவடிக்கும் உள்ளுர் சிரிய தரப்பினர்களின் அபூ சிதைன் கிராமத்திற்கும் இடையில் அவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்” என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட மேற்படி கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் கிளர்ச்சியாளர் வசமிருந்த கடைசி பிராந்தியமான கிழக்கு கெளத்தாவின் மிகப் பெரிய நகரான தூமாவை ஜெயிஷ் அல் இஸ்லாம் போராளிகளே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனினும் அரச படையின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் அந்த நகரில் இருந்து வெளியேற அந்த போராளிகள் இணங்கியுள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் சிரிய அரச படை பல வாரங்கள் நடத்திய இடைவிடாத வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை அடுத்து அங்கு நிலைகொண்டிருந்த ஏனைய கிளர்ச்சிக் குழுக்களும் வெளியெறுவதற்கு ரஷ்யாவுடன் உடன்பட்டது. சிரிய படையின் கடந்த ஒருசில வார தாக்குதல்களில் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் 1.600க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதில் ஜெயிஷ் அல் இஸ்லாம் போராளிகளின் நிலைமை சிக்கல் கொண்டதாகும், இவர்கள் ஏனைய கிளர்ச்சிக் குழுக்களுடன் நல்லுறவை பேணவில்லை என்பதோடு துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனும் முறுகல் போக்கை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஆதரவாக அல் பாப் நகர குடியிருப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கடந்த புதன்கிழமை அந்த நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூமா நகரில் இருந்து ஏற்கனவே 7000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டிருப்பதோடு அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் போராளிகளாவர்.

ஜெயிஷ் அல் இஸ்லாம் போராளிகளை வெளியேற்றுவது குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் முறிந்தபோது ரஷ்யா மற்றும் சிரியா அந்த நகர் மீது மீண்டும் குண்டுகள் வீச ஆரம்பித்தன. இதன்போதே இரசாயன தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனினும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாகவே இராசாயன தாக்குதலை ரஷ்யா குறிப்பிடுகிறது. இந்நிலையில் கிழக்கு கெளத்தா பிராந்தியம் முழுவதும் கிட்டத்தட்ட அரச படை வசமாகி இருப்பதோடு இதில் தூமா நகரில் நேற்று ரஷ்ய இராணுவ பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...