சவூதி தலைநகரை நோக்கி வந்த மற்றொரு ஏவுகணை முறியடிப்பு | தினகரன்

சவூதி தலைநகரை நோக்கி வந்த மற்றொரு ஏவுகணை முறியடிப்பு

யெமனில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து சவூதி தலைநகர் ரியாதை நோக்கி வீசப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை வான் பாதுகாப்பு முறைமூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி அரேபியா குறிப்பிட்டுள்ளது. இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

தமது தலைமை ‘பலிஸ்டிக் ஆண்டை’ பெயரிட்டதை குறிக்கும் வகையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக யெமனின் ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் சவூதி இராணுவம், தீர்வுடன் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஹூத்திக்களின் கோட்டையாக இருக்கும் வடக்கு யெமனின் சாதாவில் இருந்து வீசப்பட்டிருக்கும் இந்த ஏவுகணை ரியாத் நகரை நோக்கி பாய்ந்த நிலையில் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக ஹூத்திக்களுக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான கூட்டுப்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை வீச்சுக்கு இலக்காகி வரும் ரியாத் நகரின் வானுக்கு மேலால் தீப்பிழம்பு ஏற்பட்டதை அங்கிருப்பவர்கள் கண்டுள்ளனர்.

யெமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை நிறுவுவதற்காக சவூதி தலைமையிலான கூட்டுப் படை ஒன்று கடந்த 2015 மார்ச் மாதம் தொடக்கம் அங்கு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறது. அது தொடக்கம் இடம்பெற்று வரும் மோதல்களில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...