எது நல்ல தொடுதல்? | தினகரன்

எது நல்ல தொடுதல்?

 

குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டிய விடயங்கள்...

ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். இது தொடர்பாக பெற்றோர், சிறுவர்,- சிறுமிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

சிறுவர்,-சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உலகில் ஆங்காங்கே நடந்த வண்ணமே இருக்கின்றன. சட்டத்தை எவ்வளவுதான் கடுமையாக்கிய போதிலும் சிறுவர்,சிறுமியர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுக்க முடியாதிருக்கிறது.

பாடசாலைகள், வெளி இடங்களில் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். அதன் மூலம் மற்றவர்களின் தவறான அணுகுமுறையில் இருந்து குழந்தைகளால் தற்காத்துக் கொள்ள முடியும். இதுதொடர்பாக பெற்றோர், சிறுவர்- சிறுமிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இங்கே தரப்படுகின்றன.

* உன் உடல் உனக்கு மட்டும்தான் சொந்தம். அதனை எந்த வகையிலும் தீண்டவோ, காயப்படுத்தவோ மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.

* எந்த உறுப்புகளெல்லாம் உள்ளாடையால் மறைக்கப்படுகிறதோ அவை உன்னுடைய தனிப்பட்ட உறுப்புகள். உன்னுடைய உடல் ஆரோக்கியத்திற்காக தவிர வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியான அணுகுமுறை அல்ல என்பதை பெற்றோர் விளக்கிக் கூற வேண்டும்.

* மனதுக்குப் பிடித்தமானவர்கள் இறுக்கமாக கட்டிப்பிடித்தோ, முத்தம் கொடுத்தோ அன்பை வெளிப்படுத்துவார்கள். பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் அப்படி அரவணைப்பதற்கும், இரகசியமாக அப்படி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படி யாராவது இரகசியமாக செய்தால் உடனே அதனை நம்பிக்கையான பெரியவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும் பெற்றோர் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது.

* சிலர் குழந்தைகளுக்கு பரிசு,பணம், ​ெசாக்லேட் போன்றவைகளை கொடுத்து அவர்களின் சொற்படி நடக்க வைப்பதற்கு முயற்சிப்பார்கள். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் குழந்தைகள் வாங்கக் கூடாது. இதனை பெற்றோர் குழந்தைகளுக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

* யாராவது ஒருவர் இரகசிய தொடுதல் செய்கைகளை செய்தாலோ, அதனை யாரிடமும் சொல்லாமல் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலோ அதுபற்றி குழந்தைகள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். இதனை பெற்றோர்தான் குழந்தைகளுக்கு பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.

* யாராவது தவறான எண்ணத்துடன் தொட்டுப் பேசினால் உடனே ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று பயமின்றி சத்தமாக சொல்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

* யாராவது குழந்தைகளுக்கு பிடிக்காத மாதிரியான செய்கைகளில் ஈடுபட்டாலோ, பயம், குழப்பம், தர்மசங்கடமான நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் தொடுவதற்கு முயற்சி செய்தாலோ சத்தம் போட்டு அவர்களுடைய பிடியில் இருந்து மீள்வதற்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

* ஒருவர் தவறான எண்ணத்தில் தொடுகிறார் என்பதை உணர்ந்ததும் தயக்கமோ, பயமோ, குழப்பமோ இல்லாமல் நெருக்கமானவர்களிடம் சொல்லி விட வேண்டும். அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் மற்றவர்களிடம் கண்டிப்பாக கூற வேண்டும். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தயக்கமின்றி சொல்ல வேண்டும்.

* யாராவது ஒருவர் தவறான எண்ணத்தில் தொடுதல் செய்கையில் ஈடுபட்டு காயப்படுத்தினால் அது குழந்தைகளின் தவறு அல்ல என்பதை பெற்றோர் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். சில சமயங்களில் குழந்தைகளால் வெளியே சொல்ல முடியவில்லை என்றாலோ, அந்த இடத்தில் இருந்து விலகி செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ அவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் இதற்கு அவர்கள் காரணமில்லை. உடனே வெளியே சொல்ல முடியவில்லை என்றாலும் எப்போது மற்றவர்களிடம் சொல்வதற்கான சந்தர்ப்பம் அமையுமோ அப்போதாவது சொல்லிவிட வேண்டும். ஒருபோதும் மனதுக்குள்ளே புதைத்து வைக்கக் கூடாது. 


Add new comment

Or log in with...