மோடியின் தமிழக விஜயம்! வரலாறு காணாத கடும் எதிர்ப்பு | தினகரன்

மோடியின் தமிழக விஜயம்! வரலாறு காணாத கடும் எதிர்ப்பு

காணும் இடமெல்லாம் கறுப்புக் கொடிகள்

தமிழ்நாட்டின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்றுக் காலை சென்னையை வந்தடைந்தார். விமான நிலையத்தைச் சூழ பல்வேறு இடங்களிலும் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதிரணி முக்கியஸ்தர்கள் பலர் உட்பட நுற்றுக்கணக்கானோர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இராணுவ தளவாடக் கண்காட்சி நடைபெறும் காஞ்சிபுரம் திருவிடந்தையை நோக்கி பிரதமர் மோடி ஹெலியில் சென்றார். ஹெலிகொப்டர் பயணம் செய்த பகுதியெங்கும் கறுப்புக்கொடிகளையே காணமுடிந்தது. கறுப்பு பலூன்களை ஆகாயத்தில் பறக்க விட்டும் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இராணுவ தளவாட கண்காட்சியைத் தொடக்கி வைத்து மோடி உரையாற்றினார். இந்திய பிரதமர் ஒருவர் தமிழகத்தில் சந்தித்த மிகப்பெரும் எதிர்ப்பு இதுவாகும்.

*********************************************

இந்தியாவில் எந்தவொரு பிரதமரும் இதுவரை சந்திக்காத எதிர்ப்பு!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுகாலவரை எந்தவொரு பிரதமருமே சந்தித்திருக்காத எதிர்ப்பை தமிழ்நாட்டுக்கு நேற்று வருகை தந்த நரேந்திர மோடி சந்திக்க வேண்டியிருந்தது.

தமிழ்நாட்டின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையத்திற்கு நேற்றுக்காலை வந்திறங்கினார்.

மோடி விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எங்கு பார்த்தாலும் கறுப்புக் கொடிகளையே காண முடிந்தது.

அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சென்னையின் பல பகுதிகளில் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம், திருவிடைந்தை பகுதியில் நடைபெற்று வரும் இராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்ததை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பரங்கிமலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் விமானம் நிலையம் அருகிலுள்ள உயரமான பேனர் தட்டியின் மீது ஏறி கறுப்புக்கொடி காட்டினர். அதனால், விமான நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வந்திறங்கிய மோடி அங்கிருந்து இராணுவ தளவாட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவிடந்தை சென்றார்.

இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.கவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வீட்டிலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன.

மோடி வருகைக்காக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களை பொலிசார் கைது செய்தனர்

பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியிலிருந்து சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 60 பேர் டி.ஐ.ஜி சர்மா தலைமையில், சென்னை வந்திருந்தனர்.விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே விமான நிலையத்துக்குள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன. கார் நிறுத்தும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான டிக்கெட் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் விமான நிலைய வளாகத்துக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுத படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.காவிரி மேலாண்மை மையம் அமைக்க வலியுறுத்திப் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், பிரதமர் செல்லவிருக்கும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தின.

இதுஇவ்விதமிருக்க, சென்னையை அடுத்த திருப்போரூர் வட்டத்தில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் பத்தாவது இராணுவ கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த விழா நேற்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அறிமுக நாளான நேற்று முப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது . அறிமுக விழாவை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் நாற்பத்து ஏழு நாடுகளைச் சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் 650 பங்கேற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 75 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த இராணுவக் கண்காட்சி முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறுகின்றது.

பிரதமர் மோடி கொண்டுவந்த 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், இராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தனியார் வசம் செல்ல இருப்பதை முன்னிட்டு இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கவும், இந்த கண்காட்சியானது நடைபெறுகிறது.

இராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி திருவிடந்தை சுற்றுவட்டாரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

கடந்த 1 மாதமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் பிரமாண்ட பீரங்கிகள் கண்காட்சித் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. இதே போன்று இராணுவத்தின் முக்கிய பிரிவுகளில் உள்ள கமாண்டோ வீரர்களும் திருவிடந்தையில் குவிக்கப்பட்டனர். தமிழகத்தில் நடைபெறும் முதல் இராணுவ கண்காட்சி என்பதால் தொழில் முதலீட்டாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கண்காட்சி திடலில் மொத்தம் 8 தனித்தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. அதில், அந்தந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் டோனிக்கு இராணுவத்தில் லெப்டினன்ட் கேர்ணல் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அவர் சென்னையில் தங்கியிருந்தார். இந்த நிலையில், இராணுவ அதிகாரி என்ற முறையிலும் பாதுகாப்புத்துறை பணிகள் மீது ஆர்வம் கொண்டவர் என்ற முறையிலும் டோனி கண்காட்சிக்கு வந்தார். அவரை, இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். டோனியுடன் இராணுவ அதிகாரிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அதிநவீன பீரங்கி ஒன்றில் ஏறி இராணுவ வீரர்கள் உடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அதை தொடர்ந்து கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.கப்பற்படை, தரைப்படை, வானூர்திப்படை என முப்படைகளும் ஒரே நேரத்தில் பங்கேற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இராணுவக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதர்மான், தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேவேளை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்கள் மற்றும் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் கறுப்புகொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரித்து விருதுநகர், சிவகாசி பகுதிகளில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கறுப்புக்கொடி ஏற்றி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர் பர்மா ​ெகாலனியில் உள்ள வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகையொட்டி 8000 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு, அடையாறு புற்றுநோய் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நேற்று 11 மணி முதல் 2.30 மணிக்கு போக்குவரத்து மாற்றப்பட்டது. இதையடுத்து சின்னமலையிலிருந்து ராஜ்பவன் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அடையாறிலிருந்து மத்திய கைலாஷ் வழியாக நேரடியாக செல்ல முடியாது.

மக்களின் தொடர் போராட்டங்களால் கிண்டி_- பல்லாவரம் இடைய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவிரி வாரியம் அமைக்காத பிரதமர் மோடி சென்னை வருவதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுஒருபுறமிருக்க, மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தர்மலிங்கம் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்தார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மனமுடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை அடுத்த சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (25) 8 வது வரை பாடசாலைப் படிப்பை முடித்தவர். திருவிழாக் காலங்களில் பொம்மை வியாபாரம் செய்து, கிடைக்கின்ற வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். அம்மா, அப்பா இறந்துபோக, பாட்டி ரத்தினம்மாளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

கடந்த ஒரு மாதமாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தொடர்ந்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்தவர்,நேற்றுமுன்தினம் காலை 3.30 மணியளவில் அவருடைய ேமாட்டார்சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.

அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். 95 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை 9.45 மணியளவில் உயிரிழந்தார்.உயிரிழந்த தர்மலிங்கம் எந்த அரசியல் கட்சியையும் அரசியல் அமைப்பையும் சேராதவர். அதிகம் யாருடனும் பேசமாட்டாராம். காவிரி பிரச்சினை அவருடைய மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்த வேளையில் மோடியும் தமிழ்நாட்டுக்கு வரவிருந்ததால் அவர் தீக்குளித்திருக்கிறார்.

உயிர் இறப்பதற்கு முன்னதாக தர்மலிங்கம் தன்னுடைய வீட்டுச்சுவரில், 'மத்திய அரசே, கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர். எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்க தமிழன் இல்லையா? தமிழ்நாட்டு மக்களிடம் துணிந்து சொல்லுங்க பார்க்கலாம். தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' என தன்னுடைய ஆதங்கத்தை ​ேசாக்பீஸால் எழுதியிருக்கிறார்.

இதேவேளை 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தயவுசெய்து செயல்படுங்கள்' என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை வலியுறுத்தும் விதமாக வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், 'ஐயா, வணக்கம். இது கமல்ஹாசன். நான் உங்கள் குடிமகன். இது, மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித்தரும் திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல.

தமிழக மக்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், செயல்படுத்தவேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்தத் தாமதம், கர்நாடகத் தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். அது, ஆபத்தானது. அபாயகரமானதும்கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழர்களுக்கும் கன்னர்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்தவேண்டியது என் உரிமை. இந்த வீடியோவில் சொல்ல மறந்ததை கடித வடிவில் அனுப்புகிறேன். தயதுசெய்து செயல்படுங்கள். இந்த நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா, நீங்களும் தான்' என்று பேசியுள்ளார்.

இராணுவ கண்காட்சியை முறைப்படி தொடக்கிவைத்த மோடி, "காலை வணக்கம்" என்று தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். ‘ இராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முறையாக இந்திய நாடுகளில் தயார் செய்யப்பட்ட இராணுவ தளவாட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. உலகுக்கு அகிம்சையைப் போதித்த நாடு நமது நாடு’ என்றார் மோடி.

" இந்திய நாகரிகத்தை வர்த்தகம் மற்றும் கல்வியின் வாயிலாக ஏற்படுத்திய சோழர்களின் மண்ணில் நின்று பேசுவதில் மகிழ்ச்சி" என்றும் மோடி கூறினார்.

கோவை , திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து கண்காட்சிக்கு வந்த பா.ஜ.க-வினர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பா.ஜ.க கொடியுடன் கண்காட்சி நடக்கும் வளாகத்தின் வெளியே சிறிது நேரம் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர். வெளிநாட்டினர் சிலர் முறையான அனுமதிச்சீட்டு பெறாததால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

கறுப்பு உடை அணிந்தவர்களும் கண்காட்சி நடக்கும் வளாகத்தினுள் அனுமதிக்கப்படவில்லை.


Add new comment

Or log in with...