ஐ.தே.க தனி ஆட்சியமைக்க சு.க ஒதுங்குவதே தார்மீகம் | தினகரன்

ஐ.தே.க தனி ஆட்சியமைக்க சு.க ஒதுங்குவதே தார்மீகம்

* இராஜினாமா செய்த 16 சு.க எம்.பிக்களும் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
* மத்தியகுழு தீர்மானம் எடுக்கும் வரை எதிர்க்கட்சியாக செயற்படுவதாகவும் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சி நடத்த இடம் கொடுத்து சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்ற எமது விருப்பத்தை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அறியத்தந்துள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இராஜினாமா செய்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் நேற்று தெரிவித்தனர்.

மத்திய செயற்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் வரை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் எதிர்க்கட்சியாக இருந்து சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோமென்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

தேசிய அரசாங்கம் எனும் பரீட்சை தோல்வியடைந்துள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை 122 வாக்குகளால் வென்ற பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதே ஜனநாயகம் என சுட்டிக்காட்டிய அவர்கள் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினாலும் எதிர்க்கட்சியாக செயற்பட்டு 2020 இல் தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஏற்ற வகையில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோமென்றும் கூறினார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜனாதிபதி லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் மத்திய செயற்குழுவைக் கூட்டி எமது வேண்டுகோளை பரிசீலனை செய்து எமது விருப்பத்துக்கு ஆதரவாக சரியான தீர்மானத்தைப் பெற்றுத் தருவாரென்ற நம்பிக்கைகயில் இருக்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேக்கர, சந்திம வீரக்கொடி, திலங்க சுமத்திபால உள்ளிட்ட குழுவினரால், அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக இராஜினாமா செய்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சார்பிலும் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

மத்திய செயற்குழு எமது வேண்டுகோளை நிறைவேற்றுமாயின் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமருக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இயல்பாகவே அரசாங்கத்திலிருந்து விலக நேரிடும் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.

எஸ்.பி திசாநாயக்க எம்.பி தெரிவித்ததாவது-

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சண்டைப்பிட்டிப்பதை விடுத்து அவர்களுக்கு தனி அரசாங்கம் நடத்த இடம் கொடுக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். ஊழல் மோசடிகளைத் தவிர்த்து நாட்டு மக்களுக்கு நல்லாட்சியைப் பெற்றுத்தரும் நோக்கிலேயே நாம் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைத்தோம். ஆனால் ஐ.தே.க, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் பொருளாதாரத்தையே விரட்டிச் செல்கின்றனர். காசுக்காக அரசாங்கத்தின் உடைமைகளை விற்கின்றனர். எனவே நாம் தேசிய அரசாங்கத்திலிருந்த விலகி எதிர்க்கட்சியாக இருந்து சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்தவுள்ளோம்.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினாலும் மக்களுக்கான அனைத்து தீர்மானங்களிலும் நாம் செல்வாக்கு செலுத்துவோம் என தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எம்.பி கூறுகையில்-

கடந்த 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதை வைத்துப் பார்த்தால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை எதிர்த்து வாக்களித்த மற்றும் நடுநிலையாக செயற்பட்ட இரு தரப்புமே ஐ,தேகவுக்கு துரோகமே இழைத்துள்ளன.

இதனால் அனைவரும் தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதே தார்மீகம். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் ஐ.தே.கவுடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கிறார்கள்.

மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கமைய அவ்வாறானவர்கள் யார்? என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் விரும்பினால் தொடர்ந்தும் ஐ.தே.கவுடனேயே இருக்கட்டும்.

தேசிய அரசாங்கத்தில் நான் மிகுந்த விட்டுக் கொடுப்புடனேயே செயற்பட்டுள்ளேன். அமைச்சரவைப் பேச்சாளராக நான் ஒருபோதும் எனது வரையறையை விட்டு வெளியேறியதில்லை. எனது கட்சியை பிரசாரம் செய்யவில்லை. இந்நிலை தொடர்ந்தால் எமக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் பாரிய வீழ்ச்சிக் காணும் அபாயம் ஏற்படும். எனவே நாம் முன்கூட்டியே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதே சிறந்தது என கூறினார்.

டிலான் பெரேரா எம்.பி தெரிவித்ததாவது-

எமக்கு மனசாட்சி உண்டு. மக்களின் விருப்பத்துக்கமையவே நாம் பிரதமருக்கு எதிராக வாக்களித்தோம்.தேசிய அரசாங்கம் என்பது வெறுமனே ஒரு பரீட்சை மட்டுமே. அந்தப் பரீட்சை தோல்வி கண்டுள்ளது. தொடர்ந்தும் அந்தப் பரீட்சையை முன்னெடுத்துச் செல்வது அர்த்தமற்றது.

தேசிய அரசாங்கம் என்றால் என்ன என்பது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஏன் எங்களுக்கும் கூட புரியவில்லை. அது தோல்வியடைந்திருப்பது ஜனாதிபதிக்கும் நிச்சயம் புரிந்திருக்கும். பிரதமர் தனக்கு எதிரான பிரேரணையை வெற்றிகரமாக வென்றுள்ளார். எனவே ஐ.தே.க தனியாக அரசாங்கம் நடத்துவ​தே முறையாகும். நாம் அதற்கு விட்டுக் கொடுத்து ஒதுங்க தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...