வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு; -உச்ச நீதிமன்றம் | தினகரன்

வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு; -உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை எந்த நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வது என்ற அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. இது தொடர்பான பொதுநல மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, லக்னெளவைச் சேர்ந்த வழக்குரைஞர் அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு வழக்கை ஒதுக்கீடு செய்வதற்காகவும், நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளை உருவாக்குவதற்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

வழக்கு ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது, நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளை உருவாக்குவது என்பது தலைமை நீதிபதியின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.

இதற்கு என்று ஏற்கெனவே விதிகள் உள்ளன' என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். முன்னதாக, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்குகளை மற்ற நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். எல்லா முடிவுகளையும் அவரே எடுக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகமும் சரியில்லை' என்று 4 நீதிபதிகளும் குற்றம்சாட்டினர். மேலும், நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதமும் அப்போது வெளியிடப்பட்டது. அதில் 'தலைமை நீதிபதி என்பவர் சம அதிகாரம் படைத்த நீதிபதிகளில் முதலாமவர் என்பதும் அவர் மற்ற நீதிபதிகளை விட மேம்பட்டவரும் அல்ல; குறைந்தவரும் அல்ல என்பதும் இந்த நாட்டின் சட்ட அமைப்பில் முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்றாகும். இந்தத் தத்துவத்தை மீறும் வகையில் சில நிகழ்வுகள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண் (92) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது குறித்து தலைமை நீதிபதி பின்பற்றுவதற்கான கொள்கைகளும், நடைமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும் வழக்குகளை எந்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்குவது என்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முழுமையாகத் தரப்பட்ட அதிகாரம் அல்ல.

அவர் நீதிமன்றத்தின் பிற மூத்த நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்துதான் இது தொடர்பாக முடிவுகளை எடுக்க வேண்டும்' என்றும் கோரியுள்ளார். மேலும், இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் செயலாளருக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

அதில், தனது மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் விசாரணைக்கு ஒதுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூவரிடம் இந்த மனுவை விசாரணைக்கு அனுப்புவது சரியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனது மனுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், பதிவாளரையும் பதில் தர வேண்டியவர்கள் பட்டியலில் பூஷண் இணைத்துள்ளார்.


Add new comment

Or log in with...