அமெரிக்காவின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை | தினகரன்

அமெரிக்காவின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதல்

சிரியாவில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் இரசாயன தாக்குதலுக்கு இராணுவ ரீதியில் பதில் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்காவை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

“நீங்கள் தற்போது தீட்டி வரும் திட்டங்கள் குறித்து நான் மீண்டும் உருமுறை அறிவுறுத்துகிறேன்” என்று ரஷ்யாவுக்கான ஐ.நா தூதுவர் வசிலி நெபன்சியா கடந்த செவ்வாய்கிழமை குறிப்பிட்டார்.

முன்னெடுக்கப்படும் எந்தவொரு சட்டவிரோத இராணுவ நடவடிக்கையின் விளைவுகளுக்கும் அது பொறுப்பேற்ற வேண்டி இருக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார்.

எனினும் தூமா நகரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது ஒன்றிணைந்து செயற்பட இணக்கம் ஏற்பட்டிருப்பதாக மேற்கத்தேய தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எந்த ஒரு தாக்குதலும் சிரிய அரசின் இரசாயன நிலைகள் மீது இலக்கு வைக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். வலுவான பதில் நடவடிக்கை ஒன்று குறித்து உறுதி அளித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த திட்்டத்திற்காக அவர் மற்றும் அவரது பாதுகாப்பு செயலாளர் ஜெம்ஸ் மட்டிஸ் இந்த வார பயணத்திட்டங்களையும் ரத்துச் செய்துள்ளனர்.

சிரியாவின் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு தூமா மீதான சந்தேகிக்கப்படும் இந்த இரசாயன தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள், மீட்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யா இராணுவ ஆதரவை வழங்கும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு இரசாயன தாக்குதலின் பின்னணியில் இருப்பதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ஐ.நா என்ன செய்கிறது?

ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிளவுபட்ட சந்திப்பின்போதே ரஷ்யா அமெரிக்காவுக்கு மேற்படி எச்சரிக்கையை விடுத்தது. இதில் தாக்குதல் தொடர்பில் விசாரணை குழு ஒன்றை அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவது தோல்வியில் முடிந்தது.

பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக இருக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் வீட்டோ அதிகாரமும் உள்ளது. சுயாதீன விசாரணை குழு ஒன்றை அமைப்பது குறித்து இந்த நாடுகள் முன்வைத்த பரிந்துரைகளை பரஸ்பரம் நிராகரித்தன.

சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை பகிர்வதற்கு விசாரணையாளர்களுக்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்காவின் வரைவு தீர்மானம் இருப்பதோடு பாதுகாப்பு சபையில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தில் அது கைவிடப்பட்டிருந்தது.

தூமா மீது தடை செய்யப்பட்ட ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய இரசாயன ஆயுத தடுப்பு அமைப்பின் குழ ஒன்று விரைவில் அங்கு செல்லவுள்ளது. எனினும் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை அந்த அமைப்பை கண்டறியாது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கடுமையான வார்த்தைப்போர் இடம்பெற்ற நிலையிலேயே செவ்வாயன்று பாதுகாப்பு சபை மீண்டும் கூடியது.

இதில் அமெரிக்கா தனது இராணுவ செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்காக முன்கூட்டியே இந்த தீர்மானத்தை உருவாக்கி இருப்பதாக நெபன்சியா குற்றம்சாட்டினார்.

“மிகக் கவலைக்கிடமான மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கான ஆரம்பத்தில் இருப்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்” என்று அவர் பாதுகாப்பு சபையில் கூறினார்.

இதற்கு பதலளித்த ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே, வாக்கெடுப்பு ஒன்றுக்கு அழைப்பது ‘பரிகாசத்திற்கு’ உரியது என்றார்.

“ரஷ்யா பாதுகாப்பு சபையின் நம்பகத்தன்மையை அழித்துவிட்டது” என்றும் அவர் சாடினார். “சிரியா விடயத்தில் நாம் பரிந்துரைக்கும் எந்த ஒரு அர்த்தமுள்ள விடயத்தின் மீதும் ரஷ்யா வீட்டோவை பயன்படுத்துகிறது” என்றும் கூறினார்.

இராணுவ நடவடிக்கை சாத்தியமா?

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகிறது. சிரியா தொடர்பில் அவதானத்தை செலுத்துவதற்காக டிரம்ப் லத்தீன் அமெரிக்காவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தையும் ரத்துச் செய்துள்ளார்.

இந்நிலையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டது அன்றி மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றாக இருக்கும் என்று அவதானிகள் நம்புகின்றனர்.

ஒருங்கிணைந்த மேற்கத்தேய இராணுவ நடவடிக்கையை அதிகரிப்பது குறித்து அமெரிக்க அரசு பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனிடையே சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதல் குறித்து மேலும் ஆதாரங்களை தரும்படி டிரம்பிடம் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கேட்டிருப்பதாக ‘தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தகர்ப்பு யு.எஸ்.எஸ் டொனால்ட் குக் போர் கப்பல் தற்போது மத்தியதரைக் கடலில் நிலைகொண்டுள்ளது. சிரியா மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதால் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு மேலால் பயணிக்கும் விமானங்கள் அடுத்த ஒருசில தினங்களில் அவதானத்துடன் இருக்கும்படி ஐரோப்பிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுப்பது குறித்து ரஷ்யாவின் பல முக்கிய புள்ளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு அது ஏவும் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்று லெபனானுக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் சசிப்கின் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குண்டுகளில் நச்சு வாயுவை நிரப்பி சிரிய அரசே தூமா நகரில் தாக்குதலை நடத்தியதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள், மீட்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இரசாயன பொருளை முகர்ந்த அறிகுறிகளுடன் 500க்கும் அதிகமானவர்கள் மருத்துவ மையங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக சிரியர்–அமெரிக்கர் மருத்துவ சமூகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் சுவாசிக்க சிரமப்படுபவர்கள், தோல் நீலநிறமானவர்கள், வாயால் நுரைகக்குபவர்கள், கருவிழி காயங்கள் மற்றும் குளோரின் போன்ற வாசனை உழிழ்வுகளை வெளிப்படுத்தியவர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரசாய தாக்குதலில் 70 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குண்டுத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக நிலவறைகளில் பதுங்கி இருப்பவர்களை மீட்பாளர்கள் நெருங்கும்போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

நிலவறைகளில் மறைந்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த இரசாயன தாக்குதல் வேண்டும் என்று நடத்தப்பட்டிருக்கலாம் என்று பிரான்ஸுக்கான பிரதிநிதி பாதுகாப்பு சபையில் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை அடுத்து அதுவரை தூமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயிஷ் அல் இஸ்லாம் கிளர்ச்சியாளர்கள் சிரிய அரச படையிடம் சரணடைந்து அங்கிருந்து வெளியேற இணங்கினர். 


Add new comment

Or log in with...