தாயின் கருப்பையினுள் வைத்து சிசுவுக்கு சத்திர சிகிச்சை | தினகரன்

தாயின் கருப்பையினுள் வைத்து சிசுவுக்கு சத்திர சிகிச்சை

இலங்கையில் அபூர்வமான சத்திர சிகிச்சை ஒன்றை பேராதனை வைத்தியசாலை ​ெடாக்டர்கள் அண்மையில் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள செய்தி ஊடகங்களில் வெளியானமை தெரிந்ததே.

தலைப்பாகத்திலும் கழுத்திலும் பாரியதொரு கட்டி ஏற்பட்டதன் காரணமாக சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் பிரதேசங்களில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு சிசுவை தாயின் கருவறையிலே வைத்து சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர் வைத்தியர்கள். அதன் பின்னரே தாயாருக்கு பிரசவம் நடந்தது.

இரண்டு மணித்தியால வெற்றிகரமான சத்திர சிகிச்சையின் பின்னர் அத்தாயார் குழந்தையைப் பிரசவித்தார்.

சிசு ஒன்று தாயின் கருவறையில் இருக்கும் போது தொப்புள் நாளம் ஊடாகவே ஒட்சிசன் மற்றும் ஏனைய போசணைகள் பறிமாறப்படுவதால், அச்சிசு தாயின் உடலில் இருக்கும் போது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லலை. ஆனால் ஆனால் சிசு பிரசவிக்கப்பட்ட பின்னர் வெளியுலகுடன் தொடர்புபட்டு காற்றைச் சுவாசிக்க முயற்சிக்கும் போது சுவாசம் தடைப்பட்டு சிசு மரணிக்கும் என வைத்தியர்கள் கருதினர்.அதனையடுத்தே வைத்தியர்கள் மேற்படி முயற்சியில் இறங்கி சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

குழந்தை பிரசவிக்கப்படும் போது சுவாசத் தொழிற்பாடு ஆரம்பமாவதுடன், அது தடைப்படின் உயிராபத்து ஏற்படும் என வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்தார்.எனவேதான் தாயாரின் கருப்பைக்குள் வைத்து சிசுவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி கட்டியை முற்றாக அகற்றுவது சிரமான காரியமாகையால் தற்காலிகமாக சுவாசக் குழாயக்கு மேலதிக குழாய் இணைப்பு ஒன்றைப் பொருத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேராதனை வைத்தியசாலை அமைக்கப்பட்டு 40 வருட வரலாற்றில் இவ்வாறான ஒர் ஆபத்தான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் மாதுல ஹெட்டியாரச்சி, மயக்கமருந்து மருத்துவர் வசந்தி பின்டோ, குழந்தை வைத்தியர் பெத்தும் திசாநாயக்கா, மயக்க மருத்துவர் சமிர வாசல, தொண்டை காது மூக்கு வைத்தியர் எஸ். பீ. அத்துல்கம மற்றும் ரஷ்மி, ஊதா கடந்த கதிர்த் தொழிற்பாட்டு வைத்தியர் ஜீவனி உடுபிஹில்ல, விசேட வைத்தியர்களான தாரக சந்திர சேக்கர, கபில ஹெட்டியாரச்சி மற்றும் பேராதனை சிறுவர் வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த பல வைத்தியர்கள் இணைந்து இச்சத்திரசிகிச்சையை செய்து முடித்துள்ளனர்.

பிபிலை, பிட்டகும்புறை என்ற இடத்தைச் சேர்ந்த 36 வயதுடை மூன்று பிள்ளைகளின் தாயான தம்மிக ஜயசிங்க என்பரே மேற்படி சிசு​ைவச் சுமந்த தாயாவார். தற்போது சிசுவும் தாயும் பூரண சுகத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிபிலை வைத்திய சாலையைச் சேர்ந்த சிசு மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் ஒருவரே அசாதாரண நிலையில் சிசு இருப்பதை அறிந்து ராகம வைத்தியசாலைக்கு தாயாரை அனுப்பியுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்கதிர் பரிசோதனை, மற்றும் ஸ்கான் பரிசோதனை என்பவற்றின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்த வைத்தியர்கள் பேராதனை வைத்தியசாலைக்கு தாயாரை அனுப்பியுள்ளனர். அதன் பின்னரே இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்.ஏ. அமீனுல்லா 


Add new comment

Or log in with...