ஹெலி பயணம் எதற்கு? | தினகரன்

ஹெலி பயணம் எதற்கு?

துணிவிருந்தால் வீதிவழியாக பயணம் செய்து வாருங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக விவசாயிகளுக்கு பலன் தரக் கூடிய வகையில் காவிரி நீர்ப் பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கவும், தமிழகத்திற்கான காவிரிநீர் உரிமை நிலைநாட்டப்படவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது விவசாயப் பெருமக்கள், அரசியல் கட்சியினரின் வேண்டுகோளாக இருக்கிறது.

2007ம் ஆண்டு வழங்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பு முதல் உச்சநீதிமன்றம் கடைசியாக பெப்ரவரி 16இல் சொன்ன இறுதித் தீர்ப்பு வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக காவிரி வாரியம் தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதம் மார்ச் 30ம் திகதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில்தான் சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் இராணுவ கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

பிரதமரின் வருகையின் போது கறுப்புக்கொடி மற்றும் கறுப்புச் சட்டை அணிந்தும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. பிரதமரின் விமானம் மேலே பறந்தாலும் கீழே கறுப்புக் கடலாக காட்சியளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 6.20இற்கு டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் 9.25க்கு சென்னை வந்தடைகிறார். 9.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலி​ெகாப்டர் மூலம் பிரதமர் மாமல்லபுரம் செல்கிறார். அங்கிருந்து வீதி மார்க்கமாக திருவிடந்தை சென்று இராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

11.50 மணி வரை இராணுவ கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு 11.55 மணிக்கு மீண்டும் மாமல்லபுரம் ஹெலிபேட் இருக்கும் இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலி​ெகாப்டர் மூலம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்திற்கு வருகிறார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்தை தொடக்கி வைத்த பின்னர் பிற்பகல் 1.55 மணிக்கு ஐ.ஐ.டியில் இருந்து ஹெலி​ெகாப்டர் மூலம் விமான நிலையம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பதால் பெரும்பாலும் வீதிப் போக்குவரத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி வளாகத்தில் ஹெலிபேட் அமைப்பதற்காக ஒரு பகுதி சுற்றுச்சுவரானது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் பிரதமரின் சென்னை வருகையின் போது அவர் வீதி மார்க்கமாக செல்வது என்பது மாமல்லபுரம் முதல் திருவிடந்தை வரையிலான குறுகிய அளவு மட்டுமே மற்ற அனைத்து பயணமுமே வான்வழி பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றுமுன்தினம் ஐ.பி.எல்லுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போதே கட்டுப்படுத்த முடியாமல் பொலிசார் திணறினர். இந்நிலையில் பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுஇவ்விதமிருக்க, "பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டினால், அது மோடி அவர்களுக்கு பெரும் அவமானமாகி விடும். எனவே, இதைத் தடுத்து விட வேண்டும் என்பதற்காக நமது கட்சிகளின் தலைவர்களை எல்லாம் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு எல்லாம் செய்தி வந்திருக்கிறது.

எங்களை எல்லாம் கைது செய்து விட்டால், எங்களுடைய தொண்டர்கள், தோழர்கள் எல்லாம் இல்லாமல் போய்விடுவார்களா? எனவே, கைது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒருவேளை கைது செய்தால், இந்தப் போராட்டத்துக்கு இன்னும் வலு சேரும். எனவே, எப்போது கைது செய்ய வருகிறீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார் ஸடாலின்.

"சென்னையில் மறியல் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதும், மெரினாவில் 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு இருப்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் தெரிந்தும் நாங்கள் ஏற்கனவே சென்றோம் என்றால், வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிந்துதான், அதுபற்றிக் கவலைப்படாமல் நாங்கள் சென்றோம். அதற்காக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நான் மாண்புமிகு எடப்பாடி... மன்னிக்கவும், எடுபிடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் போட்ட வழக்கின்படி உடனடியாக எங்களை எல்லாம் கைது செய்யுங்கள், என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டுமென்றாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.

"சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே மோடி வருகின்ற நாள் நமக்கு துக்க நாள். எனவே, துக்க நாளை வெளிப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். அது பறக்கத்தான் போகிறது. அதுமட்டுமல்ல, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டு மோடி அவர்கள் எந்த தைரியத்தில் இங்கு வருகிறார்? எனவே, அதை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு அன்றைய தினத்தில் அனைவரும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுஒருபுறமிருக்க, 'தமிழகத்துக்கு வரும் மோடி தைரியம் இருந்தால் வீதி வழியாக வரட்டும்' என மோடிக்கு வைகோ சவால் விடுத்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சென்னை வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் வீதி வழியாக வரட்டும். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலி​ெகாப்டர்மூலம் ஐ.ஐ.டி வளாகத்துக்குள் நேராக நுழைந்து, மோடிக்காக ஐ.ஐ.டி சுவரை இடித்துக் கட்டப்பட்ட வீதி வழியாகச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார்.

எதற்கு இவ்வளவு பாதுகாப்பு? கறுப்புக் கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும்? கொடிகளில் குண்டு வைத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரா? இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் வீதி வழியாக வாருங்கள்” என ஆவேசமாகக் கூறினார் வைகோ. வைகோ-வின் இந்தக் கருத்துக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்தில், “பிரதமரின் ஹெலி​ெகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதைக் கோழை, பயந்தாங்கொள்ளி எனக் கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ-வை வன்மையாகக் கண்டிக்கிறோம், இதைச் சொல்லும் வைகோ, யாருக்குப் பயந்து கள்ளத்தோணியில் இலங்கை சென்றார்? பிரதமர், முன்னறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாகச் சென்றவர்” எனப் பதிவிட்டுள்ளார் தமிழிசை.

 


Add new comment

Or log in with...