தமிழகம், பாண்டிச்சேரியில் முழு கடை அடைப்பு போராட்டம் | தினகரன்

தமிழகம், பாண்டிச்சேரியில் முழு கடை அடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்புக்கு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம், தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம், நடிகர்- நடிகைகள் சார்பில் மௌன போராட்டம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் தமிழகம் புதுச்சேரியில் நேற்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வந்தவாசியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். மற்ற பகுதிகளிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் பா.ம.க.வினர் நோட்டீஸ் வழங்கினர்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஒரு சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை முதலே பேருந்துகள் இயக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே பா.ம.க. நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க, த.மா.கா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்தன. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியும் ஆதரவு தெரிவித்தது.


Add new comment

Or log in with...