புத்தாண்டு காலத்தில் தவிர்த்து கொள்ளக் கூடிய விபரீதங்கள்! | தினகரன்

புத்தாண்டு காலத்தில் தவிர்த்து கொள்ளக் கூடிய விபரீதங்கள்!

தமிழ்_சிங்களப் புத்தாண்டு நாளைமறுதினம் பிறக்கிறது. இதனையொட்டி அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களும், அரச தனியார் பாடசாலைகளும் விடுமுறைகளை அறிவித்துள்ளன.

இதேவேளை இப்புத்தாண்டை சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிங்கள, தமிழ் மக்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள். அந்த ஏற்பாடுகளில் உள்நாட்டு சுற்றுலாவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் உள்நாட்டு உல்லாசப் பயணத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அதாவது விடுமுறைக் காலப்பகுதியில் குறிப்பாக சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் நுவரெலியா, யாழ்ப்பாணம், பாசிக்குடா, அநுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, கண்டி, ஹிக்கடுவை, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் உல்லாசப் பயணங்களை பலர் மேற்கொள்கின்றனர். இந்த உல்லாசப் பயணங்கள் தனிப்பட்ட ரீதியானதாகவும், நண்பர்கள் உறவினர்களுடனானதாகவும், குடும்ப ரீதியானதாகவும் அமைகின்றன.

இவ்வாறு உல்லாசப் பயணம் மேற்கொள்பவர்களில் ஒரு பிரிவினர் அந்தந்தப் பிரதேசங்களில் காணப்படும் அபூர்வமானதும், முக்கியமானதுமான இடங்களைப் பார்வையிடல், பொழுதை வினோதமாகவும், மகிழ்ச்சியாவும் கழித்தல், மதுபானம் அருந்துதல். ஆறு, கங்கை, குளம் மற்றும் கடலில் நீராடுதல் போன்றவாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் உல்லாசப் பயணங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரியாது. அத்தோடு இவர்கள் நீராடத் தெரிவு செய்யும் ஆறு, கங்கை, குளம் மற்றும் கரையோரப் பிரதேசத்தின் இயல்பை முன்கூட்டியே அறியாதிருப்பர். அவை குறித்து பெரும்பாலும் கவனம் செலுத்துவதுமில்லை..

ஆனால் சில ஆறு, கங்கை, குளங்களின் நீர் மட்டம் திடீர் திடீர் என பல அடிகள் உயரத்திற்கு அதிகரிக்கும் இயல்பைக் கொண்டிருக்கின்றன. இதற்கு இரண்டு விடயங்கள் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. அவற்றில் ஒன்று நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கும் போது அவ்வப்போது வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படும். இதன் விளைவாக ஆறு, கங்கை மற்றும் குளங்களின் நீர் மட்டம் அடிக்கடி அதிகரிக்கும். மற்றையது மழைக்காலங்களிலும் இவற்றின் நீர்மட்டம் அடிக்கடி அதிகரிப்பது வழமையானது.

இவை தொடர்பில் உல்லாசப் பயணிகளுக்கு பெரும்பாலாலும் அறிந்து கொள்ளக் கிடைப்பதில்லை. அதனால் எது ஆபத்தான இடம் எது ஆபத்தற்ற இடம் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளாத நிலையில் இவர்கள் நீராடும் இடத்தைத் தெரிவு செய்கின்றனர். அவ்வாறு தெரிவு செய்யும் இடம் சில சமயம் பாதுகாப்பற்ற இடமாக அமைந்து விடுகின்றது. இதற்கு மாத்தளையிலுள்ள கங்கை ஒன்றில் நீராடிய சிலர் கடந்த வருடம் உயிரிழந்தமையும், கண்டியிலுள்ள ஹுலு கங்கையில் அண்மையில் நீராடிய ஐவர் உயிரிழந்தமையும் நல்ல உதாரணங்களாக விளங்குகின்றன. .

மேலும் கடற்கரையோரங்களிலும் கண்ட கண்ட இடங்களில் நீராட முடியாது. நீராடுவதற்கு பாதுகாப்பான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருந்தும் இதனையும் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்வதில்லை. இதன் விளைவாக அவ்வப்போது உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதோடு நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அண்மைக் காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறான முன்னனுபவங்களின் அடிப்படையில் சுற்றுலாக்களின் போது கங்கை, ஆறு, கடல் மற்றும் குளங்களில் நீராட நினைப்பவர்கள் அது தொடர்பில் விழிப்போடும் முன்னெச்சரிக்கையோடும் செயற்படுவது மிகவும் அவசியமானது. தற்போது நாட்டில் மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் ஆறுகள், குளங்கள், கங்கைகள் என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றன. அது தொடர்பில் நீராட முன்னர் கவனம் செலுத்தத் தவறக் கூடாது.

அதேநேரம் சில மாணவர்களும் இளம் பராயத்தினரும் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் தம் இஷ்டப்படி உல்லாசப் பயணங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்வது அவசியமானது. அவர்கள் தாம் விரும்பும் இடங்களில் நீராடக் கூடியவர்களாக உள்ளனர். தமது காரியத்தின் பாரதூரத்தை முன்கூட்டியே அவர்கள் அறியாதவர்களாவர். அதன் காரணத்தினால் பெற்றோரும் உறவினர்களும் தம் இளம்பராயத்தினரின் சுற்றுலாக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்..

இவ்வாறான ஆபத்துக்கள் நிறைந்துள்ள முன்பின் அறிமுகமில்லாத கங்கை, ஆறு, குளம் மற்றும் கடற்கரையோரங்களில் நீராடுவதை நீச்சல் தெரியாதவர்கள் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானது..

அதேநேரம் ஆபத்துக்களைக் கொண்டிருக்கும் அல்லது ஆபத்துமிக்க ஆறு, கங்கை, குளங்களிலும், கடற்கரைப் பிரதேசங்களிலும் நீராடுவதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சட்டம் ஒழுங்கை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பிலான பாதுகாப்பு எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த முடியும். தேவைப்படும் பட்சத்தில் விஷேட காலப்பகுதிகளில் பொலிசாரைக் கூட பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தலாம்.

இது தமிழ்_ சிங்கள புத்தாண்டு விடுமுறைக் காலமாக இருப்பதால் இக்காலப்பகுதியை ஒழுங்குமுறையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற முறையில் திட்டமிடுவது காலத்தின் அவசியத் தேவையாகும். இவ்வாறன ஏற்பாடுகளின் ஊடாக நீரில் மூழ்கி உயிரிழத்தல் போன்ற தவிர்ந்து கொள்ளக் கூடிய உயிராபத்துக்களை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆகவே இது புத்தாண்டு விடுமுறைக்காலமாக இருப்பதால் இக்காலப்பகுதியை எவ்வித பாதிப்புக்களுக்கும் முகம்கொடுக்காத வகையில் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் அமைத்துக்கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.


Add new comment

Or log in with...