Tuesday, April 23, 2024
Home » அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்து
மாணவர்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் கும்பல்

அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்து

by damith
November 13, 2023 7:50 am 0 comment

பாடசாலைக்குச் சென்றுள்ள பிள்ளை திடீரென சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பண மோசடி செய்வோர் மற்றும் வீடுகளை உடைத்து கொள்ளையிடும் குழுக்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், குருநாகல் நகரில் பிரதான பாடசாலைகள் சிலவற்றிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு நகரிலுள்ள பிரதான பாடசாலை மாணவனின் தந்தைக்கு பாடசாலையின் பிரதி அதிபர் என தம்மை இனங்காட்டி, குறித்த மாணவன் திடீரென சுகவீனமுற்று நெவில் பெர்னாண்டோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடி சத்திரசிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாகவும் தொலைபேசி அழைப்பு மூலம் கோரப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் தந்தை சட்டத்தரணி ஒருவரென்பதால் முதலாவதாக அவர், அந்த விடயம் தொடர்பில் பாடசாலையில் வினவியதால், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதேவேளை கடந்த 08 ஆம் திகதி குருநாகல் நகரில் பிரதான மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவியொருவர், சம்பந்தமாகவும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மாணவியின் தந்தை குருநாகல் வங்கியொன்றில் பணிபுரிந்துள்ள நிலையில்,வீட்டிலுள்ள மற்றொரு மகள் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை விடுத்துள்ளார். பாடசாலைக்குச் சென்றுள்ள அவரது சகோதரி சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பாடசாலை ஆசிரியரொருவர் தமக்கு அறிவித்ததாகவும் தந்தையிடம் அவர், தெரிவித்துள்ளார்.

உடனடியாக அந்தத் தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ள குறித்த தந்தை, ஆசிரியரென தன்னை அறிமுகப்படுத்திய நபரை தொடர்புகொண்ட போது, அது பொய்யான சம்பவமென்பது தெரியவந்ததாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT