தேர்தலில் நிற்பது தொடர்பான விக்னேஸ்வரனின் வேண்டுகோள் சாதகமாகப் பரீசீலிக்கப்படும் | தினகரன்

தேர்தலில் நிற்பது தொடர்பான விக்னேஸ்வரனின் வேண்டுகோள் சாதகமாகப் பரீசீலிக்கப்படும்

தேர்தலில் நிற்பது தொடர்பான விக்னேஸ்வரனின் வேண்டுகோள் சாதகமாகப் பரீசீலிக்கப்படும்-Vigneswaran's Request Will be Considered Favourably

 

சுமந்திரனின் விளக்கம் தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து

"வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் வடக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் மிகவும் சாதகமாகப் பரீசீலிக்கப்படும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் (தமிழீழ விடுதலை இயக்கம்) தேசிய அமைப்பாளரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தத் தமக்கு உடன்பாடில்லையெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல்கள் இடம்பெறவுள்ள சூழலில் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவதெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்பீடம் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவதென இதுவரை கூடி ஆராயாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாகவேயுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப முதலமைச்சர் வேட்பாளர்களும், ஏனைய வேட்பாளர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கட்சிகளின் கூட்டு அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செல்வநாயகம் ரவிசாந்) 

 


Add new comment

Or log in with...