Home » மட்டு, தனியார் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கும் உயர்கல்வி வசதி

மட்டு, தனியார் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கும் உயர்கல்வி வசதி

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

by damith
November 13, 2023 6:10 am 0 comment

உள்நாட்டு மாணவர்களுக்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களுக்கும் உயர்கல்வியைத் தொடர மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பளிக்கப்படுமென, பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை, வழிகாட்டல்களின் பிரகாரம்,செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு அடங்கலாக தகவல் தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம் உள்ளிட்ட மேலும் சில கற்கைநெறிகள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எஸ்.எல்.ரி.சி கெம்பஸ் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இப்பல்கலைக்கழகத்திற்கு உள்நாட்டு மாணவர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பிக்கப்படும்.இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும்.

அதேநேரம் மாலைதீவு, இந்தியா, பங்களாதேசம், நேபாளம், பாகிஸ்தான் அடங்கலான நாடுகளின் மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் சர்வதேச மட்டத்தியில் விரைவில் கோரப்படும். அவர்களுக்கான வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும்.பத்தாயிரம் மாணவர்கள் தங்கியிருந்து கல்வியைப் பெறுவதற்கான வசதிகளை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி எல்லா மாணவர்களும் இங்கு கல்வி பெறலாம். அவர்களுக்கான சமய வழிபாட்டு வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும். இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வெளியே தங்கியிருந்தால், அவர்களுக்காக மாவட்டத்திற்குள் போக்குவதத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.

இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு முதலிரு வருடங்களும் கோட்பாட்டு பாடநெறிகளும் ஏனைய இரு வருடங்களும் செயன்முறைப் பயிற்சியுடனான கற்பித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் சுற்றுலா விருந்தோமல் கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு செயன்முறை பயிற்சி அளிக்கவென வாழைச்சேனை, பாசிக்குடாவில் சிட்டி ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சிவில் மற்றும் இயந்திரப் பொறியியல் கற்கும் மாணவர்களுக்கு வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பயிற்சி அளிக்கப்படும். அத்​தோடு வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அண்மித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தொழிற்சாலைகளிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இப்பல்கலைக்கழகத்தில் கற்று வெளியேறும் எந்தவொரு மாணவரும் தொழிலை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது, என்பதே எங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிடடார்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT