அருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம் | தினகரன்


அருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம்

மனிதனின் அறிவுத் தேடலில் வந்திருக்கும் தீராத வியாதி!

'எனக்கு நீங்கள் பரிசு தர விரும்பினால் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை அனுப்பி வையுங்கள்' என்றார் ரஷ்யப் புரட்சியாளர் லெனின். தனது பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டுமென மக்கள் கேட்ட போது மேற்கண்டவாறு கூறினார் அவர். உலகில் மிகப்பெரிய நூலகமாக ரஷ்யாவிலுள்ள லெனின் நூலகம் விளங்குகின்றது.

வாசிப்பு வீதம் படிப்படியாக குறைந்து கொண்டு செல்கிறது. நவீன தொடர்பு சாதனங்கள் சமூகத்தை வேறு ஒரு திசைக்குத் திருப்பியுள்ளன. சினிமா, கையடக்கத் தொலைபேசி, கிரிக்கெட், மிகையான பொழுதுபோக்குகள் என பல்வேறு காரணிகளாக இவை உருவெடுத்துள்ளன.

வாசித்துச் செய்திகளை அறிவதை விட வானொலியில் கேட்டுக் கொள்ளலாம் அல்லது தொலைக்காட்சி மூலம் பெறலாம் எனவும் இன்னும் சிலர் கையடக்கத் தொலைபேசியினூடாக குறுஞ் செய்திகளைப் பெறலாம் என்றும் நினைக்கின்றனர்.

உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது. அதனோடு ஒன்றித்து நாமும் முன்னேறிச் செல்வதென்றால் இவ்வாறான நடைமுறைகள் மூலமே அவற்றை சாத்தியப்படுத்தலாமென பலரும் நம்புகின்றார்கள்.

'ஒரு மனிதன் எப்படியானவன் என்பதை அவன் வாசிக்கும் நூல்களிலிருந்தும் அவன் வைத்திருக்கும் புத்தகத் தொகுதிகளைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்' எனும் ஆக்கபூர்வமான கருத்தை ஒரு கல்வியியலாளர் முன்வைக்கிறார். ஒரு மனிதனின் தனித்துவத்தை இனங்காட்டிக் கொள்வதற்கான சாதனமாக வாசிப்பு அமைந்து விடுகிறது.

99.0 வீத எழுத்தறிவுள்ள அமெரிக்காவிலே 51 வீதமானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்களாவர். 73 வீதமான புத்தகங்கள் இன்னும் அறவே வாசிக்காமல் நூலகங்களிலே காணப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு 32 மணித்தியாலங்கள் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடப்பவர்களும் சாதாரணமாக வாசிப்புக்கான புத்தகங்கள்,சஞ்சிகைகள்,செய்தித்தாள் போன்றவைகளை ஒரு கிழமைக்கு எட்டு மணித்தியாலங்களே வாசிக்கும் பழக்கமுடையவர்களும் அமெரிக்காவிலே காணப்படுகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் வீதம் 12 மாதங்களுக்கும் வாசித்தால் உலகில் தலைசிறந்த 25 அறிவாளிகளுக்குள் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். ஒரு பாடத்தில் 5 புத்தகங்களை வாசித்தால் குறித்த பாடத்திற்கு உலகில் தலைசிறந்தவராவீர்கள். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக வாசித்தால் ஒரு வருடத்தில் 20 புத்தகங்களை வாசிக்க முடியும்.

பாடசாலை மட்டத்தில் கல்வி நடைமுறைகளைக் கையாள்பவர்களில் முதுகெலும்பாகத் திகழும் அதிபர்,ஆசிரியர்கள் வாசிப்பில் கூடுதலான அக்கறை கொள்ள வேண்டியது எக்காலத்திற்குமான தேவையும், பொறுப்புமாகும். ஆசிரியர்கள் வாசிப்பில் கணிசமான பங்கினை வகிக்கவேண்டியுள்ளது. எழுத வாசிக்கத்தெரிந்தவர்கள் எனும் பட்டியலை மையப்படுத்தியே பொதுவாக எழுத்தறிவு வீதம் கணிக்கப்படுகின்றது.

எமது நாட்டைச்சேர்ந்த 800இற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் 30இற்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி மிகப் பிரசித்தி பெற்ற பேராசிரியர் ஒருவர் இலங்கை அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சையொன்றில் நடைபெற்ற கவலையானதும் குறித்த சாரார் வெட்கித்துத் தலைகுனிய வேண்டியதுமான சம்பவம் ஒன்றைச் சொன்னார். நேர்முகப் பரீட்சைக்காக சமுகம் கொடுத்த ஒருவரிடம் 'உங்களுக்குத் தெரிந்த, இலங்கையில் காணப்படும் கல்வித்துறை சம்பந்தமான பேராசிரியர்கள் நான்கு பேருடைய பெயர்களைக் கூறுங்கள்' எனக்கேட்ட போது சில நிமிடங்கள் மௌனியாக இருந்துவிட்டு தெரியாது என பதிலளித்ததாக பேராசிரியர் சொன்னார்.

இச்சம்பவம் அதிபர்களும், அதிபராக முனைபவர்களும் வாசிப்பில் எவ்வளது தூரம் பின்னடைவிலுள்ளார்கள் என்பதனையே சுட்டுகிறது. கல்வி பற்றிய புத்தகங்களை வாசிக்காவிட்டாலும் தினசரிப் பத்திரிகைகளையாவது வாசிக்க முயல வேண்டும்.

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நீரே சுத்தமாக இருக்கும் என்பது போல் அதிகமாக வாசிக்க வாசிக்கவே எமது எழுத்தாற்றலும், மொழித்திறனுடைய வீச்சும் அதிகரிப்பதோடு சொற்பஞ்சமின்மையும் நீங்கும். யார் யாரெல்லாம் அதிகம் எழுதுகின்றார்களோ அவர்கள் அதிகம் வாசித்திருப்பார்கள் என்பது ஆய்வுகளின் ஆக்கபூர்வமான முடிவாகும்.

'வாசிக்கும் போது கிடைக்கும் தரவுகள் பதனிடப்பட்டு அறிவாகக் கிரகிக்கப்படுகின்றன. அவ்வறிவு பயன்படுத்தப்படும் போது அது ஞான அறிவாகிறது' என்கிறார் பேராசிரியர் சோ.சந்திரசேகரம். வாசிப்புக் குறை நடத்தையால் அடுத்தவர்களின் உதவிகளையும், அனுதாபமான அணுகல்களையும் விரும்பியோ விரும்பாமலோ சந்திக்க நேரிடும்.

அண்மையில் கிழக்கு மாகாண கல்முனை கல்வி மாவட்டத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட பாடசாலையொன்றில் பரிசளிப்பு விழாவொன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டது. குறித்த மலருக்கான அதிபரின் உரையை ஓர் ஆசிரியர் எழுதிக் கொடுத்ததாக விழாவிற்குப் பின்னர் அதிபரின் இயலாமை குறித்து கதைகள் பரவின. பொதுவாக வாசிப்புக் குறை என்பது ஒவ்வொரு நாட்டினதும் தேசிய வியாதியாக உருப்பெற்றுள்ளது.

முன்னைய பரம்பரை தமது அறிவுக் களஞ்சியத்தை அடுத்த பரம்பரைக்கு வழங்கியது போலவே தற்போ​ைதய பரம்பரையும் தமது அறிவுப் பெட்டகத்தை எதிர்கால பரம்பரைக்கு வழங்க நேரிடும். ஆரம்ப சமுதாயத்தில் செவிவழியாக நடைபெற்ற இச்செயல் எழுத்தும், வாசிப்பும் கற்றுக்கொண்ட பின்னர் இக்கால சமுதாயத்தில் அனே கமாக நடைபெறுவது புத்தகங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றினாலேயாகும். ஒரு பரம்பரைக்கான அறிவுப் பெட்டகத்தை அடுத்த பரம்பரைக்காகக் கொடுக்கும்போது அந்த இரண்டா வது பரம்பரையினர் அவ்வறிவை அடிப்படையாக வைத்துக் கொண்டே மேலும் முன்னேற முடியும். அப்படி இல்லாதவிடத்து எல்லாப் பரம்பரைகளும் ஆரம்பத்திலிருந்தே அறிவைத் தேடிக்கொண்டு முன்னைய பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டு கடினமான தூரமான ஒரு பாதையில் செல்ல நேரிடும்.

அறிவைப் பெற பாடநூல்கள், பத்திரிகைகள் இருந்தால் மட்டும் பயன் கிடைப்பதில்லை. அறிவைத்தேடி அணுகும் வாயிலாக வாசிப்பை நாம் பயிற்ற வேண்டும். தற்காலத்தில் அறிவை அடைந்து கொள்வதற்கான சாதனம் வாசிப்பு என்பதால் சிறு பராயத்திலிருந்தே வாசிப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

தாய்மொழியில் மாத்திரமல்லாது பாடசாலையில் கற்கும் ஏனைய பாடங்களிலும் அறிவைப் பெற்றுக் கொள்ளும் முக்கிய ஊடகம் மொழியாகும். ஒரு பிள்ளைக்குக் கணிதத் திறன் இருந்தாலும் கணித எண்ணக்கருக்களை விபரிக்கும் மொழியை வாசித்து விளங்கிக் கொள்ள இயலாமலிருந்தால் அவனுக்குத் தனது திறன்களை வளர்த்துக் கொள்வது சிரமம்.

வாசித்தல் குறைபாடுடைய மாணவன் அனேகமாக கற்றலில் பின்தங்கியிருப்பதைக் காணலாம். பிள்ளை வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியடையும் போது வாசசித்தலின் முக்கியத்துவம் மேலும் உணரப்படும். அறிவைப் பெற்றுக் கொள்ளும் ஒரேயொரு வழி வாசித்தல் என்று கூறுமளவிற்கு உயர் கல்வியில் வாசிப்பின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கப் பொருத்தமான சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்குவது ஆசிரியருக்குரிய கடமையாகும். மாணவர்கள் விரும்பக் கூடிய முறையில் வாசிப்பை ஆரம்பித்து நீண்டகாலம் நிலைபெறக்கூடிய வாசிப்பில் ஆர்வத்தை அவர்களிடம் உண்டாக்குவது இன்றியமையாது. மாணவர்களின் முதிர்ச்சிக்கும் விருப்பத்திற்கும் உரிய முறையில் வாசித்தற் செயற்பாடொன்றை அமைத்துக் கொள்வது ஆசிரியர்களுக்குரிய செயலென்பது இதனால் தெளிவாகிறது.

க.பொ.த சாதாரண தரத்தில் பயிலுகின்றவர்களும் உயர்தரத்தில் கற்கின்றவர்களும் தத்தமது பாட நூல்கள், பாடக்குறிப்புகள், நடந்து முடிந்த வினாப்பத்திரங்கள் போன்றவற்றை வாசிப்பதோடு மாத்திரம் நின்றுவிடுகின்றார்கள்.

எவ்வாறாயினும் பெற்றோருடைய எதிர்பார்ப்புக்கு பங்கம் விளைவிக்கக் கூடாதென்பதற்காக பரீட்சையை நோக்கிய நிர்ப்பந்தத்தாலும் இவற்றை வாசிக்கின்றார்கள். மாணவர்களுக்காக வழங்கப்படும் ஒப்படை செயற்றிட்டத்திற்காக சில மாணவர்கள் தகவல்களைப் பெறும் நோக்கத்தோடு வாசிக்கின்றார்கள். இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவது வாசிப்பை ஊக்குவிக்கத் துணையாக அமையும்.

வகுப்பறையில் சிறந்த வாசிப்புச் சூழலொன்றை அமைப்பதால் குறைபாடுகள் நிரம்பிய சூழலில் வாசிக்கும் பிள்ளைக்கும் வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்கலாம். வகுப்பறையில் உபயோகிக்கப்படும் படங்கள், வாசிப்புத் தாள்கள், மாதிரி உருவங்கள் ஆகியவற்றைக் கொண்டும் அவற்றை வைத்துத் தயாரிக்கப்படும் பல விளையாட்டுச் செயன்முறைகளாலும் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கலாம்.

 

ஸெய்ன்ஸித்தீக்
(இறக்காமம்)


There is 1 Comment

மிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.

Add new comment

Or log in with...