Home » டொக்டர் றிஸ்மியா றபீக் எழுதியுள்ள ‘அறிவும் ஆரோக்கியமும்’ நூல் வெளியீடு

டொக்டர் றிஸ்மியா றபீக் எழுதியுள்ள ‘அறிவும் ஆரோக்கியமும்’ நூல் வெளியீடு

by damith
November 13, 2023 12:53 pm 0 comment

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் றிஸ்மியா றபீக் ‘அறிவும் ஆரோக்கியமும்’ எனும் நூலை எழுதியுள்ளார். குறித்த நூலில் உள்நாட்டு சுதேச வைத்தியத்துறையில் உள்ளடங்கும் ஆயுள்வேத, யுனானி, சித்த மற்றும் பாரம்பரிய மருத்துவங்களின் அடிப்படைக் கூறுகள் பற்றி அறிவூட்டல் செய்திருப்பதோடு, யுனானி மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள நோய் வராமல் தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய ஆறு அம்சங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

குறிப்பாக தோல் நோய்கள், பாரிசவாதம், தலைவலி பலவிதமான மூட்டுவாதங்கள், அஜீரணக் கோளாறுகள், இதய மற்றும் ஈரல் நோய்களுக்கான சிகிச்சை முறைகளுடன் அவற்றுக்கான விளக்கங்களும் அடங்கிய அவர் எழுதிய முதலாவது நூலை அவரது சொந்த ஊரிலே வெளியிடுவது சிறப்பு என பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, குறித்த நூல் அவர் கல்வி கற்ற தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்டது.

கண்டி தெல்தோட்டை மெதகேகிலை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், நிந்தவூர் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட டொக்டர் றிஸ்மியா றபீக் தனது ஆரம்பக் கல்வியினை எனசல்கொல்ல மத்திய கல்லூரியிலும், உயர்கல்வியை கண்டி பெண்கள் உயர் பாடசாலையிலும் கற்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மருத்துவத்துறையில் கற்று தனது பட்டப்படிப்பினையும் நிறைவு செய்துள்ளார். சிறு வயது முதல் கலை, இலக்கியம் மற்றும் எழுத்துத்துறையில் மிக்க ஆர்வம் கொண்டிருந்த றிஸ்மியா றபீக் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், சில நூல்களையும் எழுதி வருகின்றார். அவர் எழுதிய ‘அறிவும் ஆரோக்கியமும்’ நூல் அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வெளியிடப்பட்டது.

டொக்டர் றிஸ்மியா றபீக் எழுதிய குறித்த நூலை அவரது சொந்த ஊரிலும் வெளியிட்டு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, நூலாசிரியரின் 2002/2005 பாடசாலை நண்பர்கள் குழுவினர் அவர் கற்ற பாடசாலையில் அதனை வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறித்த குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூல் அறிமுக விழா எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் அதிபர் எம்.ஜீ.நயிமுல்லா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் மற்றும் தெல்தோட்டை மஸ்ஜித்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் சமூகசேவையாளர் அஷ்ஷேஹ் முனீர் சாதிக் ஆகியோர் குறித்த நிகழ்வில் பிரதம அதிதிகளாகவும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.பீ.அப்துல் வாஜித், சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் கைறுநிஸா, பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை, டொக்டர் நஜீப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். நூலாசிரியர் றிஸ்மியாவுக்கு கற்பித்த ஆசிரியர்கள் அவரது பாடசாலை நண்பர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், அவரது குடும்பத்தினர் என பலரும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியினை சமூகசேவையாளர் முனீர் சாதிக் பெற்றுக்கொண்டார். நூல் பற்றிய ஆய்வுரையினை வைத்திய அத்தியட்சகர் எம்.பீ.அப்துல் வாஜித் நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட சகலருக்கும் நூலாசிரியர் மற்றும் அதிதிகளினால் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆதம்லெப்பை றியாஸ் (பாலமுனை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT