உதயங்க வீரதுங்கவின் மாமியின் 2 வங்கிக் கணக்கு விபரங்களையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு | தினகரன்

உதயங்க வீரதுங்கவின் மாமியின் 2 வங்கிக் கணக்கு விபரங்களையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வங்கி முகாமையாளர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் அறிவுறுத்தல்

பாரிய நிதி மோசடி தொடர்பான பிரதான சந்தேக நபரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் மாமியாரின் இரண்டு வங்கிகளிலுள்ள கணக்குகளின் விபரங்களை நிதி மோசடிப் பிரிவுக்கு வழங்குமாறு, குறிப்பிட்ட வங்கி முகாமையாளர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ண நேற்று உத்தரவிட்டார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாஜிஸ்திரேட் நேற்று இவ்வாறு உத்தரவிட்டார்.

உதயங்க வீரதுங்கவின் மாமியாரின் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து 20 மில்லியன் ரூபாவை வேறு வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாகவும் இக் கணக்குகளின் விபரங்கள் மேலதிக விசாரணைகளுக்கு தேவை என்றும் நிதி மோசடிப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அத்துடன் உதயங்க வீரதுங்க, பல்வேறு நாடுகளில் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதுடன் அவற்றில் பாரியளவில் பணம் வைப்பிலிட்டிருப்பதும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதென்றும் நிதி மோசடிப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மிக் விமான கொள்வனவின் ஊடாக சுமார் 1072 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதுள்ளதாகவம் ஐக்கிய அரபு இராச்சியம், பிரான்ஸ். பனாமா உட்பட பல நாடுகளிலிருந்து தேவையான தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் சைப்பிரஸ், லித்துவேனியா பொன்ற நாடுகளிலிருந்து இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. உதயங்க வீரதுங்க, நிதிக் கையாடல் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களம், உதயங்கவின் வங்கிக் கணக்குகள் சிலவற்றை இடைநிறுத்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் காணி மற்றும் 3 சொத்துக்களை விற்பனை செய்யவோ, கைமாற்றவோ, முடியாதவாறு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அதிகளவிலான வங்கிக் கணக்குகள் உட்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாகவும் விரிவான விசாரணைகள் நடைபெறுவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...