Friday, March 29, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
November 13, 2023 9:19 am 0 comment

செருத்துணை நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தோன்றியவர் செருத்துணை நாயனார்செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவி கொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி சேர்ந்து இன்பமுற்றார்.

தப்பித்தவறி விழுந்து கிடக்கும் பூசைத்திரவியத்தைத் தானும் இச்சையால் தீண்டுதல் பழுதெனல்

நின்மலராகிய சுவாமிக்குப் பூசையில் அர்ப்பணிக்கப்படுவன யாவும் சகலவிதத்திலும் நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது சொல்லாமேயமையும். அவையொவ்வொன்றும் அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால் எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம விதிகளில் ஒன்றாயமையும். அவற்றின் மணங் குணங்களில் ஈடுபட்டு வாயூறுதலும் மூக்குளைந்து முகரவிழைதலும் கண்டிப்பாக விலக்கப்பட்டொழிந்தனவாம். அது, பூசைத் திரவியங்களை நாக்கு மூக்குத் தள்ளியெடுத்துக் கொள்ளவேண்டும் என நடைமுறை வழக்கிலிருந்து வரும் விதியால் சூசகமாக அறிவிக்கப்பட்டிருத்தல் காணத்தகும். இனி, அவ்வகையிற் பூசைக்கெனச் சங்கற்பித்தெடுக்கப்பட்டவை தற்செயலாக வழுவி விழுந்து கிடக்கும் நிலையிலும் பூசைப்பொருள்களே எனக் கொள்ளுதல் பூசைத் திரவிய மகிமையைப் பேணும் நெறியாம். அது, பூசை செய்து கழித்த பத்திர புஷ்பங்களாகிய நின்மாலியங்களை மிதித்தலாகாது என்ற வரையறை போல்வதோர் நெறியாகும். ஆதலின், தற்செயலாக நழுவிக்கிடக்கும் அவற்றைத் தானும் இரசனையுணர்வு முகர்வுணர்வுகளுக்கு விஷயமாக்குதலும் பழுதேயாம்.

செருத்துணை நாயனார் புராணம் மஹத்தான இக்கருத்து நிலையினைச் சூசிப்பதாயமைதல் காணத்தகும். இந்த நாயனார் திருவாரூர்த் திருக்கோயில் வளாகத்தில் திருத்தொண்டாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் அங்குச் சென்றிருந்த கழற்சிங்கர் என்ற அரசரின் பட்டத்துத் தேவி திருப்பூமண்டபத்தின் பக்கத்திற்கிடந்த பூவொன்றை எடுத்து மோந்ததற்குத் தண்டனைத் தீர்வாக அவள் மூக்கையே வார்ந்துவிட்டார் (இந்நிகழ்ச்சி விபரம் முன் கழற்சிங்கநாயனார் புராண சூசனத்திற் காணப்பட்டுள்ளது)

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT