நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழர் தரப்பின் நியாயங்களும் | தினகரன்

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் தமிழர் தரப்பின் நியாயங்களும்

பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரான கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்பது எதிர்வரும் நான்காம் திகதி தெரியவந்துவிடும். 

இலங்கையின் இன்றைய அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கின்றது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை! 
இதனை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து இன்று திங்கட்கிழமை தீர்மானிக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சு.கவின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகின்ற கூட்டத்தில் இதுபற்றிய முடிவு மேற்கொள்ளப்படுகின்றது.  

அதேசமயம், அரசாங்கத்தின் பங்காளிகளான சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக செயற்படுமெனத் தெரிகின்றது. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவும், சிறிய கட்சிகளின் ஆதரவும் உள்ளதனால், பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியினால் தோற்கடிக்கப்படுவதற்கான அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன. 

சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க் கட்சியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுதான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பாராளுமன்றத்தில் பதினாறு ஆசனங்களைக் கொண்டிருக்கின்றது.  
கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அடுத்தபடியாக கூடுதல் பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. இவ்வாறான நிலையில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளப் போகின்ற தீர்மானமே முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் என்பதே பொதுவான நம்பிக்கையாக இருக்கின்றது.  
2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புரிந்துணர்வு, நல்லிணக்கத்தின் அடிப்படையில் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பானது, இன்றைய நாள் வரை அரசுடன் நல்லிணக்கத்தையே கடைப்பிடித்து வருகின்றது. அரசுக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு இரகசியமான ஒன்றல்ல.  

பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற வாக்கெடுப்பாகட்டும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விவகாரமாகட்டும்... அரசுக்கு விரோதமான அரசியல் நிலைப்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மேற்கொண்டதில்லை.  

தமிழ்க் கூட்டமைப்பின் இவ்வாறான நிலைப்பாட்டை தவறென்று கூறி விடவும் முடியாதிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழினத்தின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான பேரம்பேசும் சக்தியும் இழக்கப்பட்டு விட்டதென்பதே உண்மை.  
தமிழினத்தின் இவ்வாறான பலவீன நிலைமையை முன்னைய அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. தமிழர்களை நாதியற்ற இனம் போன்று கருதிய முன்னைய ஆட்சியாளர்கள், மென்மேலும் அவ்வினத்தை மலினப்படுத்தும் காரியங்களிலேயே ஈடுபட்டனர். அரசியல் உரிமைகள் மாத்திரமன்றி அடிப்படை உரிமைகளுக்காகவும் கையேந்த வேண்டியதாகவே தமிழினம் இருந்தது. 

அவ்வாறான அவலம் நிறைந்த காலப் பகுதியில் 2015 ஜனாதிபதித் தேர்தலே தமிழ் மக்களை ஓரளவு மூச்சுவிட வைத்தது எனலாம். ஆட்சி மாற்றத்தினால் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் இழக்கப்பட்ட கௌரவம் மீண்டும் கிடைப்பதற்கு ஆட்சி மாற்றமே வழிவகுத்தது எனலாம்.  
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பிரதான பங்காளிகளாக ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் விளங்குகின்றனர். தமிழினத்தை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கருதிய முன்னைய ஆட்சியாளர்களையும், நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாடு கொண்ட இன்றைய ஆட்சியாளர்களையும் ஒப்பீடு செய்து முடிவெடுக்கும் தார்மிகப் பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது.  

பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவளிக்குமென நாம் வைத்துக் கொள்வோம். அவ்வாறானால், பிரதமர் ரணிலின் இடத்துக்கு மாற்றீடாக பெரும்பான்மை அரசியல்வாதிகளில் எவரை தமிழினம் வைத்துப் பார்க்க முடியுமென்ற வினா இங்கே எழுகின்றது.  

2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் பிரதமர் ரணிலின் பங்களிப்பு அளப்பரியது. அரசியலமைப்புச் சீர்திருத்த விடயங்களில் பேரினவாதிகளின் எதிர்ப்புகளுக்கெல்லாம் அப்பால் துணிச்சலுடன் நகர்வுகளை முன்னெடுத்தவர் ரணில். 

பிரதமருக்கு எதிரான இன்றைய நம்பிக்கையில்லாப் பிரேணையிலும் கொஞ்சமாவது இனவாதம் கலந்துள்ளதென்பதை மறுதலிக்க முடியாது. சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரென்பதற்காக பிரதமர் மீது சேறுபூசும் பெரும்பான்மை அரசியல்வாதிகளே நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதான காரணகர்த்தாக்களாக உள்ளனர்.
 
இவ்வாறான நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கப் போகின்றது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.    


Add new comment

Or log in with...