Tuesday, April 23, 2024
Home » மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை ஒலிமாசடைதல்!

மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை ஒலிமாசடைதல்!

by gayan
November 11, 2023 6:00 am 0 comment

தரைச்சூழல், நீர்ச்சூழல், வளிச்சூழல் மாசடைவது போன்று ஒலி மாசடைவதும் உலக மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். ஒலிமாசடைதல் பிரச்சினைக்கு இலங்கையும் விதிவிலக்கு அல்ல. பிரதானமாக, நகரங்களில் வாழ்கின்ற மக்கள் ஒலிமாசடைதல் பிரச்சினைக்கு அதிகம் முகம்கொடுக்கின்றனர்.

ஒலிமாசடைதல் என்பது உலகின் மிகவும் ஆபத்தான பிரச்சினைகளில் ஒன்றாகும். இன்றைய காலத்தில் எமது பூமி அதிகளவில் ஒலி மாசடைதலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்த ஒலி மாசடைதலானது ஏனைய மாசடைவுகளான காற்று மாசடைதல், நீர் மாசடைதல், நிலம் மாசடைதல் போன்றனவற்றை போலவே உயிரினங்களுக்கு ஆபத்தானதாகும்.

இன்று பறவைகளின் இனிய குரல்கள் படிப்படியாக ஓய்ந்து வருகின்றன. கிராமங்களில் கூட அந்த இனிமையான குரலைக் கேட்பது அரிதாகி வருகின்றது. எங்கு பார்த்தாலும் பேரிரைச்சலையே கேட்க முடிகின்றது. இது எமது பௌதிகச் சூழலை வெகுவாகப் பாதிக்கின்றது. இதனால் சூழல் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

ஒலி மாசடைதல் எனப்படுவது பூமியில் இயற்கை தவிர்ந்து, வேண்டப்படாத ஒலிகள் நமது சூழலில் அதிகரிப்பதைக் குறிக்கின்றது. இது மனிதர்களை மாத்திரமன்றி விலங்குகளையும் அசௌகரியமடையச் செய்கின்றது. இந்த ஒலிகளின் அளவு சூழலில் அதிகரிக்கின்ற நிலைமையானது ஒலிமாசடைதல் என அழைக்கப்படுகின்றது.

மனிதனின் அன்றாட நடவடிக்கைகள், இனிமையான உரையாடல்கள், உறக்கம் போன்றவற்றைக் குழப்புகின்ற ஒரு விடயமாக ஒலிமாசடைதல் பார்க்கப்படுகின்றது. இது கண்ணால் பார்க்க முடியாத ஒரு மாசடைவாகும்.

அதிகளவான போக்குவரத்தும், வாகனங்களது இரைச்சலும் நகர மக்களை தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றன. கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் இப்பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்தபடியே செல்கின்றது. நெரிசல் மிகுந்த வீதிகளின் அருகில் இருக்கும் போது அதிக ஒலியானது எங்களை தொந்தரவு செய்வதை எங்களால் உணர முடியும்.

இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரைச்சல்கள், கட்டட வேலைகள், துளையிடுதல், மரம் அறுத்தல் போன்ற வேலைகளும் கனரக இயந்திரங்களால் உருவாகும் சத்தங்களும் ஒலிமாசடைவை ஏற்படுத்துகின்றன.

நகரப்பகுதிகளில் இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சைலன்ஸர் பாகத்தை அகற்றி விட்டு அதிக சத்தத்துடன் விரைந்து செல்வதை நாம் சாதாரணமாகவே காண்கின்றோம். இதுவும் ஒலிமாசடைவில் ஒன்றுதான்.

ஒலிமாசடைதலானது மனித ஆரோக்கியத்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இயற்கையாக எமது சூழலில் இருக்கின்ற அமைதி கெடுகின்ற போது, மனிதனுக்கு பல உடல்சார்ந்த மனம்சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன் செவிப்புலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்துடன் உயர் இரத்தஅழுத்தம், மனஅழுத்தம், உறக்கமின்மை, நிறக்குருடு போன்ற பிரச்சினைகள் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் பெரும்பாலும் இரைச்சல் மிகுந்த நகர வாழ்க்கையை விரும்புவதில்லை.

உலகின் பெருநகரங்கள் கைத்தொழில் நிலையங்கள் அதிகம் உள்ள இடங்களாக உள்ளதனால் அங்கு அதிகளவான ஒலிமாசடைதல் ஏற்படுகின்றது. அங்கு மக்கள் நிம்மதியாக வாழ்வது கடினமாகின்றது.

இந்த இயந்திர வாழ்க்கையில் மக்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது, நிம்மதியாக உறங்க முடியாது அவதியுறுகின்றனர். இதனால் அதிகளவான மக்கள் மனஅழுத்தம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒலிமாசடைதலைக் குறைப்பதற்கு ஒரே வழி இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும், மோசமான இயந்திரப் பாவனைகளைக் குறைத்து பசுமை நகரங்களை உருவாக்குதலும் ஆகும். இயற்கையை மதித்து நடப்பதே ஒலிமாசடைதலைக் குறைக்க உதவும்.

இன்றைய காலத்தில் பெரிய நகரங்களில் வாழ்கின்ற மக்களில் பலர் அங்குள்ள மாசடைதலை விரும்பாது அழகான இயற்கையுடன் கூடிய கிராமங்களுக்குச் சென்று வாழ ஆசைப்படுகின்றனர்.

மனஅமைதியுடனும் நிம்மதியாகவும் வாழவே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். அதனைத்தான் இந்த இயற்கை எமக்கு வரமாகத் தந்தது.

அதனை நாகரிக வளர்ச்சி எனும் பெயரில் நாம் மாசடையச் செய்வது நாம் செய்யும் பெரும் தவறாகும். கொழும்பு போன்ற நகரங்களில் காதைப் பிளக்கும் பேரிரைச்சலுடன் செல்கின்ற வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்துப் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டால் ஒலிமாசடைவதை பெருமளவில் குறைக்க முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT