த.தே.கூ. ஆதரவுடன் பொத்துவில் பி.சபையை கைப்பற்றியது ஐ.தே.க. | தினகரன்

த.தே.கூ. ஆதரவுடன் பொத்துவில் பி.சபையை கைப்பற்றியது ஐ.தே.க.

த.தே.கூ. ஆதரவுடன் பொத்துவில் பி.சபையை கைப்பற்றியது ஐ.தே.க.-UNP-(SLMC)-TNA-Take-Over-Pottuvil-PS-Abdul-Wasith

 

தவிசாளர் ஐ.தே.க.வுக்கு; பிரதித் தவிசாளர் த.தே.கூ.வுக்கு

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு இன்று (29) சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் 06 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக 05 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 04 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 03 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 02 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒருவருமாக மொத்தமாக பொத்துவில் பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ. சதக்கத்துல்லாஹ் ஆகியோரின் பெயர்கள் சபையில் பிரேரிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்யும் பொருட்டு நடாத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் வாஸித்துக்கு 10 வாக்குகளும், சதக்கத்துல்லாவிற்கு 08 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இவ்வாக்களிப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுயட்சைக் குழு என்பன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கின.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் பெறும் தேசியகாங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகிப்பதாக அறிவித்தனர். இதன்படி எம்.எஸ். அப்துல் வாஸித் தவிசாளராக தெரிவானார்.

அதனைத் தொடர்ந்து புதிய தவிசாளரின் தலைமையில் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. பிரதித் தவிசாளர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஏ.எம். அப்துல் மஜீத் மற்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பெருமாள் பார்த்திபன் ஆகியோரது பெயர் சபையில் முன்மொழியப்பட்டது.

இதன்போது பார்த்திபன் 10 வாக்குகளையும், அப்துல் மஜீத் 09 வாக்குகளையும் பெற்றனர். இதன் காரணமாக அதிக வாக்குகளை பெற்ற பார்த்தீபன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும், இன்றைய (29) சபை அமர்வின் போது இடம்பெற்ற இவ்வாக்கொடுப்பில் மக்கள் விடுதலை முண்ணனி உறுப்பினர் ஒருவர் எவருக்கும் சார்பாக வாக்களிக்காமல் நடுநிலை பேணியதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நகரவட்டர வேட்பாளர் எம்.எச். அப்துல் றஹீம் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயட்சைக் குழு என்பன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய நிலையிலே தவிசாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பிரதித் தவிசாளர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கிடைத்துள்ளது.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர் - எஸ். அறூஸ், பாலமுனை விசேட நிருபர் - ஏ.எல். றியாஸ்)

 


Add new comment

Or log in with...