யாழ்.மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
யாழ் மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ் மாநகரசபை அமர்வு வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (26) யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
27 வட்டாரம் மற்றும் 18 விகிதாசார ஆசனங்கள் என்ற அடிப்படையில் யாழ் மாநகரசபைக்கு ஆறு கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசு கட்சி - TNA) சார்பில் 16 பேர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) சார்பில் 13 பேர், ஈ.பி.டீ.பி (EPDP) சார்பில் 10 பேர், ஐக்கிய தேசிய கட்சி (UNP) சார்பில் 03 பேர், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி (SLFP) சார்பில் 02 பேர், தமிழர் விடுதலை கூட்டணி (TULF) சார்பில் ஒருவர் என யாழ் மாநகரசபைக்கு 45 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் தெரிவான சுதர்சிங் விஜயகாந்த என்பவர் நீதிமன்றால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்றுள்ள நிலையில் ஏனைய 44 உறுப்பினர்களின் சமூகமளிப்புடன் இன்று (26) முதலாவது அமர்வு இடம்பெற்றது.
உறுப்பினர்கள் சார்பில் முதல்வரை தெரிவு செய்யுமாறு உள்ளூராட்சி ஆணையாளரினால் கோரப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட்டையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் முடியப்பு ரெமிடியாசையும் தமது கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தனர்
இதையடுத்து மாநகர முதல்வரைதெரிவு செய்வதற்கு இரகசியவாக்கெடுப்பா? பகிரங்க வாக்கெடுப்பா என முடிவு செய்யும் பொருட்டு உறுப்பினர்களிடம் பகிரங்கமாக கருத்து கேட்கப்பட்டது
இதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பையும் ஏனைய 25 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பையும் கோரிய நிலையில் முதல்வரை தெரிவு செய்வதற்கென இரகசிய வாக்கடுப்பு உறுப்பினர்களிடையே நடைபெற்றது
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் 18 வாக்குகளையும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் 13 வாக்குகளையும் முடியப்பு ரெமீடியஸ் 13 வாக்குகளையும் பெற்றனர்.
பெரும்பான்மையாக வாக்குகளை எந்த உறுப்பினரும் பெற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன் இரு உறுப்பினர்கள் சமமான வாக்குகளை பெற்ற காரணத்தால் அவர்கள் இருவருக்கிடையின் திருவிளைச்சீட்டு மூலம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பிரேரிக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டார்
இதன்பின்னர் பின்னர் ஆர்னோல்ட் மற்றும் ரெமீடியஸ் இருவருக்கிடையில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்ப்பட்ட நிலையில் ஈ.பி.டீ.பியால் பிரேரிக்கப்பட்ட ரெமீடியஸ் அந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்
இதனடிப்படையில் அதிக வாக்குகளை பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் மேயாராக தெரிவானதாக உள்ளூட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டார்
இதையடுத்து பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைபின் சார்பில் துரைராசா ஈசன் பிரேரிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் அவர் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
Add new comment