தரவுகள் திருடப்பட்டதற்காக பேஸ்புக் நிறுவனர் மன்னிப்பு | தினகரன்

தரவுகள் திருடப்பட்டதற்காக பேஸ்புக் நிறுவனர் மன்னிப்பு

தரவுகள் திருடப்பட்டதற்காக பேஸ்புக் நிறுவனர் மன்னிப்பு-Facebook's Zuckerberg speaks out over Cambridge Analytica breach

 

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் தரவுகள் அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றிடம் கசிந்த விவகாரம் தொடர்பில் தவறு நிகழ்ந்திருப்பதை பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டார். 

கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா என்ற நிறுவனம் தனது அரசியல் வாடிக்கையாளர்கள் சார்பில் இந்த பயனர்கள் தரவுகளை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.  

“நம்பிக்கை மீறல்” எற்பட்டுள்ளது என்று அறிவிப்பொன்றை வெளியிட்டு சுக்கர்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இது தொடர்பில், “மிகவும் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டதோடு, கட்டுப்பாடற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.  

செய்ய வேண்டிய சரியான நடவடிக்கையாக அது இருந்தால் அமெரிக்க பாராளுமன்றத்தின் முன் சாட்சியமளிப்பதை மகிழ்ச்சியாக கருதுவாக அவர் குறிப்பிட்டார்.  

சுக்கர்பேர்க்கின் அறிவிப்பு பேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருப்பதோடு, செயலிகளுக்கு பயனர்களின் தகவல்களை பெறுவது கடிமாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.  

“உங்களது தரவுகளை பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அதனை செய்ய முடியாது என்றால் உங்களுக்கு சேவையாற்றும் தகுதியை நாம் இழப்போம்” என்று சுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் பேஸ்புக்கின் தற்போதைய மற்றும் கடந்தகால பிரச்சினைகள் பற்றி விளக்கமளித்திருக்கும் அந்த நிறுவனம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளது.  

  • பெருமளவான தகவல்களை வைத்திருக்கும் அனைத்து பேஸ்புக் செயலிகள் குறித்தும் விசாரிக்கப்படும். 
  • சந்தேகத்திற்கிடமான செயலிகளின் பணபரிவர்தனைகளை முழுமையாக பரிசோதிக்கப்படும். 
  • முழுமையான பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ளாத செயலிகள் தடை செய்யப்படும். 
  • தனிநபர் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களை தடை செய்வது மேலும் அந்த செயலியால் பாதிக்கப்பட்டோர்களிடம் அது குறித்து கூறுவது.  
  • ஒரு செயலியை பயனாளிகள் மூன்று மாதத்திற்கு மேலும் பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் பயனாளிகளின் தகவல்கள் அந்த செயலியிலிருந்து நீக்கப்படும். 
  • ஒரு செயலிக்குள் செல்லும்போது பயனாளிகள் தரும் தகவல்களை குறைப்பது அதாவது வெறும் பெயர், புகைப்படம், மின்னஞ்சல் ஆகியவற்றை மட்டும் வழங்குவது. 
  • செயலிகளை உருவாக்குபவர்கள், தனிநபர் தகவல்களையோ பதிவுகளையோ பெற கையெழுத்து ஒப்புதல் பெற வேண்டும்.

லண்டனை தளமாக கொண்ட கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்று 50 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் விபரங்களை அனுமதியின்றி பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொலான்ட் டிரம்பின் பிரசார நடவடிக்கையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான பிரிட்டனின் சர்வஜன வாக்கெடுப்பிலும் பிரசாரங்களில் பணியாற்றியுள்ளது.  

கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் ஒரு செயலி ஊடாக பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் உளவியல் நிபுணரான அலக்சான்டர் கொகன் உருவாக்கிய செயலி 270,000 பேர் தரவிறக்கம் செய்த நிலையில் அவர் கொள்கைகளை மீறி அந்த தரவுகளை கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக பேஸ்புக் விளக்கமளித்துள்ளது.  

கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகளைபேஸ்புக் தணிக்கை செய்யும் என பேஸ்புக் நிறுவனர் குறிப்பிட்டுள்ளார். 

இது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    
 


Add new comment

Or log in with...