தியவன்னா ஓயா BMW கார் உரிமையாளருக்கு விளக்கமறியல் | தினகரன்

தியவன்னா ஓயா BMW கார் உரிமையாளருக்கு விளக்கமறியல்

தியவன்னா ஓயா BMW கார் உரிமையாளருக்கு விளக்கமறியல்-Diyawanna Oya BMW Accident-Owner Remanded

 

பத்தரமுல்ல, தலவதுகொட பிரதேசத்தில் தியவன்னா ஓயாவில் விபத்துக்குள்ளான BMW i8 அதிசொகுசு காரின் உரிமையாளருக்கு மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (20) கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (19) தனது சட்டத்தரணியுடன் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை (19) அதிவேகமாக வந்த குறித்த கார், இரு கார்களில் மோதுண்டு தலவதுகொட, தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக, தலங்கம பொலிசார் தெரிவித்தனர்.

இசிபதானை வீதியிலுள்ள கார் வர்த்த நிலைய உரிமையாளர் ஒருவரின் மகனின் பெயரில் குறித்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குள்ளானபோது, குறித்த காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விபத்து காரணமாக கிம்புலாவெல - தளவத்துகொட வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

காரை ஓட்டிச் சென்றவர் அமைச்சர் கபீர் ஹாசிமின் உறவினர் என சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் தனது உறவினர் எனவும், அவருக்கும் தனது அமைச்சுக்குமோ அல்லது தனிப்பட்ட அலுவலக பணியிலோ எவ்வகையிலும் சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று முன்தினம் (18) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...