பிள்ளைகள் மீது அன்பிருந்தால் அரசாங்கம் சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் | தினகரன்

பிள்ளைகள் மீது அன்பிருந்தால் அரசாங்கம் சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்

சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.கோரிக்ைக

சிறுபிள்ளைகள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்மையில் அன்பு இருந்தால் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தம் சுதாகரனுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுடன் வாழ்வதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்த) சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய கைதின் பின்னர் மன உளைச்சலுக்கு உள்ளான சுதாகரனின் மனைவி அண்மையில் உயிரிழந்தார். மனைவியின் இறுதிச் சடங்களில் கலந்து கொள்வதற்கு மூன்று மணித்தியாலங்கள் சுதாகரனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இறுதிக் கிரியைகளை முடித்துக் கொண்டு மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் ஏறமுற்பட்டபோது சுதாகரனின் பிள்ளைகளும் தந்தையுடன் சிறைசெல்ல தயாரான சம்பவம் மக்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பொது நிகழ்வுகள் பலவற்றுக்குச் செல்லும் ஜனாதிபதி அங்கிருக்கும் சிறுவர்களை அரவணைத்து மகிழ்விப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படியான ஒருவர் ஏன் கிளிநொச்சியில் தாயை இழந்தும், தந்தையைப் பிரிந்தும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தப் பாலகர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சுதாகரனுக்குப் பொது மன்னிப்பு வழங்கக் கூடாது? என்றும் கேள்வியெழுப்பினார்.

தாய் உலகை விட்டுப் பிரிந்துவிட்டார், தந்தை ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் நிலையில், இந்தப் பாலகர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பினால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் எதிர்காலம் அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் மன அழுத்தம் என்பவற்றைப் போக்குவதற்கு அவர்களுடைய தந்தைக்குப் பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வாக அமையும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெற்றுக் கொண்டு, சர்வதேச விதிகளுக்கு உட்பட்ட புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் சச்சிதிதானந்தம் சுதாகரனுக்கு மன்னிப்பளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதியைக் கோரும் வகையில் கிளிநொச்சி மக்கள் கையெழுத்து சேகரித்து வருகின்றனர். இந்தக் கையெழுத்துக்களுடன் வரும் சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நீதி அமைச்சு செய்து கொடுக்க வேண்டும்.

உண்மையில் பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட ஜனாதிபதியாயின் இந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட சுதாகரனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


There is 1 Comment

janatipathi udan mainnepu codukkhvandum

Pages

Add new comment

Or log in with...