சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா | தினகரன்

சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா

சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா- Nidahas Trophy Final-India Won

 

இறுதிப் பந்தில் 6 ஓட்டங்களை குவித்தார் தினேஷ் கார்த்திக்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்ற ரி20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

நேற்று (18) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி வெற்ற இந்திய அணி, பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதற்கமைய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் சப்பிர் ரஹ்மான் 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

பங்களாதேஷ் 166/8 (20.0)
சப்பிர் ரஹ்மான் 77 (50)
மஹ்முதுல்லாஹ் 21 (16)

யுஸ்வேந்திர சாஹல் 3/18 (4.0)
ஜெயதேவ் உனட்கட் 2/33 (4.0)

167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 17 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது.

18 ஆவது ஓவரை வீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் தனது ஓவரில் உதிரியாக 1 ஓட்டத்தை (Leg by)  மாத்திரம் வழங்கியதோடு, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அவரது ஓவரை எதிர்கொண்ட தமிழ் நாடு வீரர் விஜய் சங்கர் நிலை தடுமாறினார்.

இதனை அடுத்து, 12 பந்துகளில் 34 ஓட்டங்கள் பெற வேண்டிய இக்கட்டான நிலையை இந்தியா எதிர்கொண்டது.

ஆயினும் அடுத்து களமிறங்கிய மற்றுமொரு தமிழ் நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக், ருபல் ஹொசைன் வீசிய 19 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே 6 ஓட்டங்களை விளாசினார்.
18.1 - ஆறு ஓட்டங்கள் (6)
18.2 - நான்று ஓட்டங்கள் (4)
18.3 - மற்றுமொரு ஆறு ஓட்டங்கள் (6)
18.4 - ஓட்டம் எதுவும் பெறப்படவில்லை (0)
18.5 - இரண்டு ஓட்டங்கள் (2)
18.6 - மற்றுமொரு நான்கு ஓட்டங்கள் (4)

இதனையடுத்து, வெற்றி பெறுவதற்கு 6 பந்துகளில் 12 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இந்திய அணி, சற்று ஆறுதலடைந்தது.

20 ஆவது ஓவரை வீசுவதற்காக செளம்யா சர்கார் அழைக்கப்பட்டார். விஜய் சங்கர் ஓவரை எதிர்கொண்டார்.

இறுதிப் பந்தில் 5 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அதிரடியாக அடித்து 6 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார் தினேஷ் கார்த்திக்.

19.1 - அகலப்பந்து (1)
19.1 - ஓட்டம் எதுவும் பெறப்படவில்லை (0)
19.2 - ஒரு ஓட்டம் - சங்கர் (1)
19.3 - ஒரு ஓட்டம் - கார்த்திக் (1)
19.4 - நான்கு ஓட்டங்கள் - சங்கர் (4)
19.5 - ஆட்டமிழப்பு - சங்கர் (0)
19.6 - 6 ஓட்டங்கள் - கார்த்திக் (6)

அதன் அடிப்படையில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றி கொண்டு சுதந்திர கிண்ணத்தையும் கைப்பற்றியது.

இந்தியா 168/6 (20.0)
ரோஹித் சர்மா 56 (42)
தினேஷ் கார்த்திக் 29 (08)

ருபல் ஹொசைன் 2/35 (4.0)

போட்டியின் நாயகன்: தினேஷ் கார்த்திக்
தொடரின் நாயகன்: வொஷிங்டன் சுந்தர்

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இத்தொடரின் இறுதி லீக் ரி20 போட்டியில் பங்களாதேஷ் அணி நடந்து கொண்ட விதம் காரணமாக, நேற்றைய (18) போட்டியில் இலங்கை இரசிகர்கள் அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருந்ததோடு, வெற்றியையும் கொண்டாடி மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய (18) இறுதிப்போட்டியில் பரிசு வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆர். பிரேமதாச மைதானத்திற்கு சமூகமளித்திருந்ததோடு, வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...