உதயங்கவுக்கு மீண்டும் பிடியாணை | தினகரன்

உதயங்கவுக்கு மீண்டும் பிடியாணை

 

* சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் உத்தரவு

* தப்பிச் சென்ற சந்தேக நபராக கருதுவதாக சவூதி அறிவிப்பு

இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று(16) மீண்டும் பிடியாணை பிறப்பித்தார்.

அத்துடன் இப் பிடியாணையை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்கும் முகமாக தமது தீர்ப்பை ஆங்கிலத்தில் வெளியிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நிதி மோசடி விசாரணைப்பிரிவு நீதிமன்றத்திடம் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னரே நீதவான் நேற்று இந்தத் தீர்ப்பை முன்வைத்தார். உதயங்க வீரதுங்க, தற்போது தப்பிச் சென்றுள்ள சந்தேக நபராகவே சவூதி அரேபியாவின் விசாரணைப் பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டின் விமான நிலையம் மற்றும் அனைத்து ஹோட்டல்களிலும் அவர் பற்றிய தரவுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதியன்று துபாய் விமான நிலையத்தில் அந்நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோதும் அவ்வதிகாரிகள் அவரது கடவுச்சீட்டு, விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு அவரை அங்கிருந்து விடுவித்திருப்பதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதேநேரம் சவூதி குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை தப்பிச் சென்றிருக்கும் சந்தேக நபரென இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறியத் தந்திருப்பதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் உக்ரேய்னிலுள்ள மாஷ் நிறுவனம் மற்றும் பெரீம்சா ஹோல்டிங்ஸ் நிறுவனம், டி.ஏ பெரிகோடவ்,டி.எஸ்.லீ மற்றும் என்.ஜி லேக் ஹிம் ஆகிய பணிப்பாளர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக மனுவொன்றை அனுப்புமாறு நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.

இது தொடர்பாக அந்நாட்டிலிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் மேலதிக விவரங்களை அறிவிக்குமாறு நீதவான் தெரிவித்ததுடன் அதன் பின்னரே பொருத்தமான ஒரு தீர்ப்பை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான நிறுவனமான பெரிம்சா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் டி.எஸ் எலையன்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே நிறுவனமாக செயற்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு நிறுவனங்களின் பணிப்பாளர்கள் ஒரே நபர்களாக இருக்கிறார்களென்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எதிர்வரும் 26 ஆம் திகதி சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதவான் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக நிதி மோசடி விசாரணைப் பிரிவின் 04 ஆம் இலக்க பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் நீதி மன்றத்தில் விளக்கமளித்து அதற்குரிய உத்தரவைக் கோரியிருந்தார். 

 


Add new comment

Or log in with...